உள்நாடு

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறவுள்ள மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் உள்ளிட்ட ஐந்து பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நாளை (07) செவ்வாய்க்கிழமை மௌண்டலவேனியா ஹோட்டேலில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதன்போதே மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் உள்ளிட்ட ஐந்து பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை, தல்கஸ்பிட்டியவினை பிறப்பிடமாகவும் தெஹிவளையினை வசிப்பிடமாகவும் கொண்ட 72 வயதான நிஸாமுதீன் உடயார் முஹம்மத் அமீன், தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலம், ஹெம்மாத்தகம அல் – அஸ்ஹர் மகா வித்தியாலம் மற்றும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவர்.

களனி பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் இளமாணிப் பட்டத்தை 1974ஆம் ஆண்டு பெற்ற இவர், ஊடகத் துறையிலான தனது அபிமானம் காரணமாக 1976ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் குழுமத்தில் தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் ஒரு பயிற்சி ஊடகவியலாளராக தனது பணியை ஆரம்பித்தார்.

அங்கு அவரது பயணம் 2007ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. முதலில் அவர் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையிலும் பின்னர் தினமின சிங்களப் பத்திரிகையிலும் பாராளுமன்ற செய்தி ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அனைத்து தமிழ் வெளியீடுகளுக்குமான முகாமைத்துவ ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2007ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் 1995ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளராக பதவியேற்றதுடன் 1998ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றிய அவர், 22 வருட காலத்துக்கு மேலாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.

கொழும்பு பல்கலைக்கழகம், தென் கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை இதழியல் கல்லூரி மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பவற்றில் ஊடகவியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் இவர் பணியாற்றி வருகின்றார்.

என்.எம்.அமீன் ஊடகத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் தன்னை இணைத்துக் கொண்ட ஒருவராகத் திகழ்கிறார். அந்த வகையில் அவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக சேவையாற்றியுள்ளதோடு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவராக தற்போதும் பணியாற்றி வருகிறார்.

அவர் தனது சேவைக் காலத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், ஜப்பான், குவைத், மாலைதீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிரித்தானியா போன்ற பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ரிப்தி அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *