உள்நாடு

மின்சார சட்டம்.சட்ட மீளாய்வுக்கு 10 பேர் கொண்ட குழு.ஒரு மாதத்துக்குள் அறிக்கை

இலங்கை மின்சார சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, சட்டத்தை ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சாரச் சட்டத் திருத்தம் தொடர்பான விரிவான மீளாய்வு மற்றும் ஒரு மாத காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக எரிசக்தி அமைச்சினால் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால இந்த குழுவுக்கு தலைமை தாங்குவதுடன், மின்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே குழுவின் செயலாளராக செயற்படுவார்.

இந்த குழுவின் அழைப்பாளராக எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன விஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய மற்றும் ஜானக அலுத்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் அதுல ராஜபக்ஷவும் உறுப்பினராக உள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி லிலந்த சமரநாயக்க, சிரேஷ்ட விரிவுரையாளர்களான துஷார ரத்நாயக்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இந்திரா மஹாகலந்த ஆகியோரும் இந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆளும் கட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, ​​முழு மின்சாரத்துறை சீர்திருத்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், போட்டி நிறைந்த சந்தைக்குள் எரிசக்தி செலவைக் குறைப்பதாக உறுதி அளித்தது.

மின்சார சட்டம் தொடர்பில் இந்தக் குழு ஆய்வு செய்து தமது அறிக்கையை சமர்ப்பித்தப் பின்னர் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *