உள்நாடு

கவி வரிகளால் கவிதை மழை பொழியும் கலைநிலா இளங்கோ, தேசிய ரீதியில் அதி சிறந்த விருது பெற்றார்

இளம் பிராயத்திலிருந்தே கவி வரிகளால் கவிதை மழை பொழியும் கலைநிலா இளங்கோ, தேசிய ரீதியில் அதி சிறந்த விருது பெற்றார்.


கொழும்பு – 13 ஜிந்துப்பிட்டி, ஜெயந்தி நகர் சிவசுப்ரமணிய ஆலய அறநெறிப் பாடசாலையைப் பிரதிநிதித்துவப் படுத்தி “திருக்குறள்” மற்றும் “நீதி நூல் ஒப்புவித்தல்” தரம் ஒன்று மாணவர்களுக்காக தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியிலேயே கலைநிலா இளங்கோ மூன்றாம் இடத்திற்குத் தெரிவாகி, இவ்வாறு அதி சிறந்த விருதும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.


இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான “தேசிய ஆக்கத்திறன் விருது விழா – 2023”, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொழும்பு – 06 வெள்ளவத்தை, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது.


கலைநிலா இளங்கோ ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையாரான இளங்கோ அனந்தகிருஷ்ணனுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற “சர்வதேச தந்தையர் தின” நிகழ்வில் “எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல” பாடலில் தோன்றினார். அதன் பிறகு, முன்பள்ளிப் பாடசாலை நிகழ்வு முதல் பல நிகழ்வுகளில் “இறை வணக்கம் தேவாரம்” பாடுதல் அத்தோடு “வரவேற்பு கவி” பாடுதல், “வரவேற்பு நடனம்” ஆடுதல் என்பனவற்றில் தேர்ச்சி பெற்று வருகிறார்.


குறிப்பாக, ஒவ்வொரு “பௌர்ணமி” தினமும் நடக்கும் “வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கில்”, 2021 ஆம் ஆண்டு முதல் தனது மூன்றாம் வயதிலிருந்தே கவி பாடி வருகின்றார். தொலைக்காட்சி நாடகம், விளம்பரப் படங்கள் ஆகியவற்றிலும், தற்பொழுது தயாராகி வரும் திரைப்படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார்.


கொழும்பு கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டு தரம் மூன்றில் காலடி எடுத்து வைத்துள்ள கலைநிலா இளங்கோ, தனது ஆறு வயதில் “எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல” பாடலுக்காக தேசிய ரீதியில் விருது பெற்றமைக்காக, தன்னைப் பெற்ற பெற்றோர்களும் ஆனந்தம் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார்.

தன்னைப்போலவே தனது இளவல் தமிழ்ப்பிரியனும் முன் பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான ரன்னராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதையும் இவர் மகிழ்வுடன் நினைவு கூறுகிறார். தன்னை வளமாக்கிய அப்பா, அம்மா, அப்பமா ஆகியோரின் துணையுடனும், அத்தையின் உறுதுணையுடனும், அனைத்து குடும்ப உறவுகளின் அன்போடு, சான்றோர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஆசியின் துணைகொண்டு, “வகவத்” தின் நல் வழிகாட்டலோடு “இளந்தாரகை – இளஞ்சிட்டு” கலைநிலா இளங்கோ, இலங்கை மண்ணுக்கு பேரும் புகழும் ஈட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.


கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் எழுத்தாளர், ஓவியர், நடிகர், இயக்குனர் என பண்முக ஆளுமைகளைக் கொண்டவரும், “கண்ணகி கலாலயம்”, “தேசிய கலை அரண்” ஆகியவற்றின் தலைவரும், சில சகோதர மொழி அமைப்புக்களில் பல முக்கிய பதவிகளை வகிப்பவருமான ஏ.கே. இளங்கோ – எழுத்தாளர் பத்திரிகையாளர் கவிதா இளங்கோ தம்பதிகளின் மூத்த புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *