இனிய நந்தவனம் 28 ஆவது ஆண்டு விழா திருச்சியில் நாளை கொண்டாடப்படுகிறது
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் 28 ஆவது ஆண்டு விழா நாளை 05 – 01- 2025 திருச்சிராப்பள்ளி, தில்லைநகர் ராம் ஹோட்டலில்
சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர். தினகரன் – வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
உலகத்தமிழர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு இதழ் , இலக்கியம், தொழில், மருத்துவம், கல்வி, போன்ற துறைகளை பிரதானமாகக் கொண்டு 28 ஆண்டுகளாக வெளிவருகிறது. இனிய நந்தவனத்தின் 25 ஆவது. வெள்ளி விழா ஆண்டில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் நேர்காணலுடன்
உலகத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுடன் 200 பக்கங்களில் சிறப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இவ்வாண்டும் உலகத் தமிழ் படைப்பாளர்களின்
படைப்புகளுடன் 200 பக்கங்களில் சிறப்பான ஆண்டு மலர் வெளியிடப்படுகிறது.
ஆண்டு விழாவை முன்னிட்டு பல்துரைகளில் சாதித்து வருபவர்களுக்கு வெற்றித்தமிழன் மற்றும் வெற்றித்தமிழினி விருதுகள் வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு புரவலர் ஹாசிம் உமர் விருதுகள் வழங்கிச்சிறப்புச் செய்கிறார். மேலும் இவ்விழாவில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரன், தொழிலதிபர்கள். ராமநிதி, ஏ.ஆர். முகம்மது அபுபக்கர் சித்திக். இரா.தங்கையா, அனிதாடேவிட், சமூக சேவகர் கே.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து கொள்கின்றனர்.
இனிய நந்தவனம் மாத சஞ்சிசையின் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர் குழுவினருடன் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்து கொள்கின்றனர்.