குசல் பெரேராவின் அதிரடி சதத்தால் புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவதும், இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் குசல் பெரேராவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்திருக்க, தொடரை 2:1 என கைப்பற்றியது நியூசிலாந்து.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியிருந்தது. இந்நிலையில் 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று இலங்கை நேரப்படி அதிகாலை 5.45 மணிக்கு நெல்சன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி இலங்கை அணியை முதலில் துட்ப்பெடுத்தாடப் பணித்தது. இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் சமிந்து விக்ரமசிங்க சர்வதேச ரி20 அறிமுகத்தினைப் பெற்றிருந்தார்.
அதற்கமைய முதலில் களம் நுழைந்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களான பெத்தும் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் 14 மற்றும் 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த குசல் ஜனித் பெரேரா அதிரடியை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 101 ஓட்டங்களை விளாசினார். அவருடன் 4 ஆவது விக்கெட் டில் இணைந்த சரித் அசலங்க 46 ஓட்டங்களை பெற்றதுடன் இவ்விருவரும் தமக்கிடையில் 100 ஓட்டங்களை பகிர இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஜேகப்ஸ் ட்டபி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த நியூஸிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ரிச்சின் ரவீந்திர 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் சரித் அசலங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற போதிலும் இத் தொடரை நியூசிலாந்து அணி 2:1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)