ஹஜ் கோட்டா பகிர்வுக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்; 3500 கோட்டாக்களைப் பகிர நடவடிக்கை, நேர்முகத் தேர்வு ஜனவரி 5 முதல் 10 வரை
இலங்கைக்கு இந்த ஆண்டு கிடைக்கப் பெற்றுள்ள 3500 ஹஜ் கோட்டாக்களையும் முகவர் நிலையங்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான துரித நடவடிக்கைகளை சமய விவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில் ஹஜ் கோட்டாக்களை ஹஜ் முகவர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கென ஐவரடங்கிய குழுவொன்றினை சமய விவகார கலாச்சார அமைச்சு நியமித்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் முஹம்மத் ஸமீல் தலைமையிலான இக் குழுவில் மூன்று பெரும்பான்மையின அதிகாரிகளும் இரண்டு முஸ்லிம் அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இக் குழு கோட்டாக்களைப் பகிர்ந்தளிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
3500 கோட்டாக்களையும் ஹஜ் முகவர்களிடையே பகிர்ந்தளிக்கும வகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிறு முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஹஜ் முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது. இந் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் முகவர்களுக்கான கோட்டாக்கள் உரிய முறையில் பகிரப்படவுள்ளன.
ஹஜ் கோட்டா பகிர்வு நிறைவடைந்ததன் பின் இப் பகிர்வு தொடர்பான பூரண அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் புதிதாக நியமிக்கப்பட்டுளள்ள ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஹஜ் கோட்டாக்கள் ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மோசடிகள் இடம்பெற்றதாக ஒரு சில ஹஜ் முகவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இவ் வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் மீண்டும் கோட்டாக்களை உரிய முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.