களுத்தறை மாவட்ட ஜனாசா சேவைகள் சங்கத்தின் 2025 ஆண்டுக்கான பணிகள் குறித்த கலந்துரையாடல்
களுத்தறை மாவட்ட ஜனாசா சேவைகள் சங்கத்தின் 2025 ஆண்டுக்கான தனது வேலைத் திட்டங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. அதன் ஓரங்கமாக பாணந்துறை பிராந்தியத்தில் இயங்கும் ஜனாஸா சங்கங்களுக்கான அடுத்தாண்டு வேலைட்திட்டங்களை தயாரிப்பதற்கான, ‘ சமூகம் வேண்டி நிற்கும் தேவைகள் ‘ எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிசம்பர் 25 ஆம் திகதி, ஹேனமுல்லை ஜமாதே இஸ்லாமி மர்கஸுல் ஹிதாயா மண்டபத்தில் நடாத்தியது.
சங்கத்தின் களுத்துறை மாவட்டத் தலைவர், எம்.எம்.எம். ஸியான் தலைமையில் மாவட்டக்கிளையின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தந்து இடம்பெற்ற இவ்வைபவத்தில் பாணந்துறை பிராந்தியத்தில் உள்ள சுமார் 6 சங்கங்கள் மற்றும் எகொட உயன பிரதி நிதிகள் கலந்து கொண்டு தம் கருத்துக்களை முன் வைத்தனர்.
ஜனாஸாவோடு தொடர்பான பணிகளோடு சமூக நலப்பணிகள்- குறிப்பாக களுத்துறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆண், பெண் கைதிகள் ரமழான் காலங்களில் நோன்பு நோற்க உணவுப் பொருட்களுக்கான அனுசரணை வழங்கல், நோன்பு திறப்பு ஏற்பாடுகள், பெருநாள் தின உணவு என்று இப்பணிகள் 26 வருடங்களாக தொடர்கின்றன.
மேலும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை நோயாளர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் சந்தித்து உளவியல் தொடர்பான ஆலோசனை மற்றும் அவர்களைத் தேற்றி துஆ பிரார்தனைகளையும் கிழமை தோறும் செய்து வருவதும், உயர் வகுப்பில் பயிலும் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு இஸ்லாம் பாட பரீட்சை வழிகாட்டிகள் உள்ளிட்ட பணிகளிலும் ஈடு பட்டு வருவது தொடர்பான விளக்கவுரைகளும் மாவட்டக் கிளை துறை சார்ந்தோரால் விளக்கமளிக்கப்பட்டன.
இம்முறை இது போன்ற கருத்தரங்கொன்றை பாணந்துறையிலும் நடாத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் சம்பந்தமான காணொளிக் காட்சி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
பாணந்துறை மர்கஸுல் ஹிதாயா நிர்வாகக் குழு உறுப்பினர் ஆசிர் மக்பூல், களுத்தறை மாவட்ட ஜனாசா சேவைகள் சங்கத்தின் பொருளாளர் அல்-ஹாஜ். ஏ.பி,எம். ஸுஹைர், நிதி, சட்ட உதவி மற்றும் கைதிகள் நலன் துணைக்குழு தலைவர். ஏ.எச்.எம். பைஸல், உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் றியாஸி மவ்ஸூன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு அவ்வப்போது தேவையான ஆலோசனைகள், விளக்கங்களையும் வழங்கினார். மாவட்டக்கிளையின் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்றுநோய் நோயாளிகள் நல துணைக்குழு தலைவர் எம்.எம்.அன்வர் ஸதாத் அவர்களின் நன்றியுரை வழங்கினார்
(முஹம்மது மொஹைதீன் நஜ்முல் ஹுசைன்)