வெகு விமர்சையாக இடம்பெற்ற கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் 2ஆவது பரிசளிப்பு நிகழ்வு
கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் 2ஆவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும், முதலாவது பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் (30) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
கல்பிட்டி பிரதேச மாணவர்களின் இலட்சியக் கனவான வைத்தியர் மற்றும் பொறியியலாளர் என்ற கனவுகளை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் முதல் வருட மாணவ, மாணவியர் இடம்பெற்று முடிந்த உயர்தரப்பரீட்சையிலே தோற்றியிருந்தார்கள்.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகளுக்கான பிரியாவிடை நிகழ்வும், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு உயர்தரம் எழுதக் காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கான தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் இச் செயற்திட்டத்தின் தலைவரும், கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்தின் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகருமான எம்.ஜி.எம். ஹிஸான் தலைமையில் நேற்று (30) மாலை பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பித்திருந்தது.
இந்நிகழ்வின் முதல் அங்கமாக இந்நிகழ்வில் பங்கேற்ற கல்பிட்டி விஞ்ஞான செயற்திட்டத்தின் ஆசிரியர்களின் உரை மற்றும் தவணைப் பரீட்சைகளில் முதல் 3 இடமங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மற்றும் இச் செயற்திட்டம் கடந்து வந்த பாதை தொடர்பான கானொளி, எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் என்பன இடம்பெற்றிருந்தன.
பின்னர் இந்நிகழ்வின் 2ஆம் அங்கமாக உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்று சுமார் இரவு 9.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது. இந்நிகழ்வில் இச் செயற்திட்டத்தின் நிருவாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பெற்றோர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவரகள் சங்க உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
(அரபாத் பஹர்தீன்)
(பட உதவி : பத்தீன் )