வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட 40 ஆவது தேசிய மீலாத் விழா
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த மீலாது விழா அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டு சிறிய விழாவாக இடம்பெற்றது.
இரத்தினபுரி பள்ளிவாசல், இரத்தினபுரி ஜன்னத் பள்ளிவாசல், பலாங்கொடை பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களை நினைவுபடுத்தி இதன்போது தபால் தலை முத்திரையும் வெளியிடப்பட்டது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன தலைமையில், முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டலில் இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் (26) வியாழக்கிழமை இடம் பெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டி. சுனில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
சப்ரகமுவ மாகாண பிரதி பிரதம செயலாளர் திலினி தர்மதாச, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி, மாகாண கல்வி பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் பிரதி, உதவி செயலாளர், தகவல் தொழில்நுட்ப செயலாளர், திட்டமிடல் செயலாளர், கல்வி உதவிச் செயலாளர், இரத்தினபுரி மாவட்டத்தின் உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர், முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், இரத்தினபுரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இரத்தினபுரி மாவட்டத் தலைவர் உட்பட உறுப்பினர்கள், இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புத்தசாசன கலாசார அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் அசங்க ரத்னாயக்க, புத்தசாசன கலாசார செயலாளர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதி, உதவிப் பணிப்பாளர்கள், மேலதிகப் பணிப்பாளர் உட்பட திணைக்களத்தின் கலாசார மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
ஒவ்வொரு வருடமும் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்ற மீலாது நபிவிழாவானது இம்முறை 40 ஆவது தேசிய மீலாது விழாவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இடம் பெற்றதோடு, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான கஸீதா, கிராஅத் மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 425 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுத் தொகைகளும் இங்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பாரம்பரிய இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நிகழ்வை மேலும் மெருகூட்டின.
மீலாது நபி விழா தொடர்பான விசேட உரையை அஷ்ஷெய்க் ரஸாத் ஸமானினால் நிகழ்த்தப்பட்டது டன் நன்றியுரையை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் வழங்கினார்.
இந்த 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபிவிழாவில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருபது முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக 100 இலட்சம் ரூபா மத மற்றும் கலாசார விவகாரங்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டது.
முஹம்மது நபியின் பிறந்த நாள் மற்றும் மறைவை நினைவுகூரும் வகையில் முஸ்லிம்கள் மீலாது நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர், அது தொடர்பாக இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் மீலாது நபி தேசிய விழாவை நடத்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)