தென் கொரிய விமான விபத்து; இருவர் மீட்பு, ஏனையோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரியாவின் மூவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
இதுவரை 124 பேரின் மரணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேசிய தீயணைப்பு நிறுவனம் தற்போது விபத்தில் சிக்கிய 124 உடல்களை மீட்டுள்ளதாகக் கூறுகிறது.
அவர்களில் 54 பேர் ஆண்கள் என்றும் 57 பேர் பெண்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கூடுதலாக 13 உடல்களை பாலின ரீதியாக அடையாளம் காண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, மீட்புப் பணிகளில் உதவ 1,562 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இதில் 490 தீயணைப்புத் துறை ஊழியர்கள் மற்றும் 455 காவல்துறை அதிகாரிகள் அடங்குவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் 173 பேர் தென் கொரியர்களும், இரண்டு பேர் தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.