கல்முனை சாஹிராவுக்கு பஸ் வண்டியொன்றை கொள்வனவு செய்ய ஸஹ்ரியன்ஸ் லயன்ஸ் 2003 – 2006 பிரிவினரால் நிதி உதவி
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டினை முன்னிட்டு பாடசாலைக்கு பஸ் வண்டி ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக கல்முனை சாஹிரா பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களான ஸஹிரியன்ஸ் லயன்ஸ் 2003 – 2006 பிரிவினர் பாடசாலைக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் (850,000) ரூபா பெறுமதியான காசோலையினை நேற்று சனிக்கிழமை (28) பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிரிடம் கையளித்தனர்.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டினைக் கொண்டாடும் முகமாக பாடசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் வகுக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் பாடசாலைக்கு பஸ் வண்டி ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக இத் தொகையினை வழங்கிய 2003 – 2006 ஸஹ்ரியன்ஸ் லயன்ஸ் பிரிவினருக்கு பாடசாலையின் சமூகம் சார்பாக அதிபர் இதன் போது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.
இதுபோன்று இப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்கள் தங்களால் முடியுமான பங்களிப்பினை வழங்கி, வெகு விரைவில் இப்பாடசாலைக்கு ஒரு பஸ் வண்டியினைப் பெற்றுக்கொள்ள தங்களால் முடியுமான உதவிகளைச் செய்ய முடியும் என்றும் தனது உரையின்போது அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் என்.எம்.றிஸ்மிர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உதவிச் செயலாளர் எம்.ஐ.எம். றியாஸ் உட்பட பிரதி, உதவி அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)