கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவு கவலை தருகின்றது
சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில் நன்கு அறிந்திருந்தவராகவும் மர்ஹூம் இஸ்ஹாக் அவர்கள் இருந்துள்ளார்.
பல்வேறு சர்வதேச கற்கைகளையும் அதேபோன்று, இலங்கைக்குள்ளும் பல்துறை செயற்பாடுகளுடன் பயணித்த ஒரு நல்லுள்ளம்கொண்டவராகவும் இவரை அடையாளப்படுத்த முடியும்.
சவூதி அரேபியாவில் நீண்டகாலம் பணிபுரிந்த நிலையில், கிழக்கில் வீடமைப்புத் திட்டத்தினை வறிய மக்களுக்காக சவூதி அரேபியாவின் உதவியுடன் நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, கிழக்கிலங்கையில் அரபு பல்கலைக்கழத்தின் தேவை உணர்ந்து, அதனது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்.
மிகவும் அன்பாகப் பழகும் சிறந்த பண்புகளைக் கொண்டவர். புனித உம்ராக் கடமையை நிறைவு செய்ய மக்கா சென்றிருந்த வேளை, இந்த மரணம் சம்பவித்துள்ளமை ஆழ்ந்த கவலை தருகின்றது.
அன்னாரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது இழப்பால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.