புனித நோன்பு காலத்தில் சாதாரண பரீட்சையா? மறு பரிசீலனை செய்யவும்; ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதிக்குக் கடிதம்
முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் (மார்ச்) சாதாரண தர பரீட்சையை நடத்துவது மாணவர்களுக்கு அசௌகரியமானது என்பதால் இது பற்றி அரசு கவனமெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக் அவர்களால் கௌரவ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோடிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதில், மார்ச் மாதம் நடுப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மார்ச் மாதம் முஸ்லிங்களின் புனித நோன்பு காலமாக அமைந்துள்ளது. அதனால் இப்பரீட்சையை நோன்பு ஆரம்பிக்க முன்னர் அல்லது நோன்பு பெருநாள் முடிந்த பின்னர் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
நோன்பு காலத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை நடத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருப்பது பொருத்தமற்ற செயலாக அமைந்துள்ளதுடன் பரீட்சை திணைக்களத்தில் முஸ்லிம் ஆலோசகர்கள் எவரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவர்களும், பரீட்சை கடமைக்கு செல்லும் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் நோன்பு காலங்களில் பரீட்சையை எதிர்கொள்வதும் சிரமம் என்பதால் இது விடயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.