வட மத்திய ஆஸ்பத்திரிகளில் தாதியர்களுக்கு பற்றாக்குறை.
வடமத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 150 கும் மேற்பட்ட தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் சுமார் 07 தசாப்தங்களாக இந்நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் தரமான சேவைகளை வழங்கும் வாய்ப்பை நாட்டுக்கு இல்லாமல் செய்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதான செயலாளர் பி.எம்.எல்.வீரசூரிய தெரிவித்தார்.
வடமத்திய மாகாண அகில இலங்கை தாதியர் சங்கத்தினால் ஹிங்குராக்கொடை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது :- வடமத்திய மாகாணத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிலவி வரும் இருத கோளாறுகள் மற்றும் ஏனைய சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த அரசாங்கங்கள் எவையும் இப்பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்கவில்லை.இந்த விடயங்கள் தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த பிரச்சனைக்கு ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.இதன்படி மாகாண சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஆளுநர் தீர்மானித்துள்ளார்.ஆனால் மாகாண சுகாதார அதிகாரிகள் பின்தங்கி உள்ளார்கள்.
2017 தொடக்கம் இந்த மாகாணத்தில் தாதியர்களுக்கான கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. இது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் 2017 ஆம் ஆண்டு சேவை நியமனங்களை வழங்கும் நடைமுறைக்கு அமைவாக அவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் அவ்வாறு செயல்படுவதால் இன்று மருத்துவமனைகளில் இதய நோய் உள்ளிட்ட சேவைகள் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாகாணத்தில் தரமான சேவையினை வழங்குவதாயின் 600 தாதியர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)