அம்பாறை மண்ணில் கவிஞினி விருதை பெற்றார் தேசபந்து பாத்திமா நுஹா நிஸார்
கடந்த 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட திறமைக்கான தேடல் தொனியில் இடம்பெற்ற 100 கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை பிரதேசத்தில் அப்துல் மஜீத் ஞாபகார்த்த பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், நிர்வாகத்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டதோடு, “திறனொளி” எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
இவ் விழாவில் கலந்து கொண்ட பேருவளை மண்ணைச் சேர்ந்த தேசபந்து பாத்திமா நுஹா நிஸார் அவர்கள் “கவிஞினி” பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவ் விழாவில் நூலை வெளியிட்டவர்களின் நூல்கள் திறனொளி கலாசாலைக்கு கையளிக்கப்பட்டது. அதில் தேசபந்து நுஹா நிஸார் அவர்களின் “புரியாத புதிர்” கவிதை பனுவலும் கையளிக்கப்பட்டது.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “புரியாத புதிர்” எனும் நூலை வெளியிட்டதோடு, கடந்த செப்டம்பர் மாதம் (2024-09-16) “லங்கா புத்ர, தேசபந்து” எனும் அரச விருதையும் பெற்றுக் கொண்டார்.
இவ் விழாவுக்கு சிறப்பு அதிதிகளாக, தேசகீர்த்தி எம்.எம் றஸ்மி (கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், சம்மாந்துறை), ஜனாப் ஏ.எல் தெளபீக் (மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், அம்பாறை மாவட்டம்), ஜனாப் ரீ.எம் றின்ஸான் (மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், அம்பாறை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இவ்விழாவை அலங்கரிக்க பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, இதனைக் கண்டு களிக்க ஊர் மக்களும், விருது பெற்றவர்களின் குடும்பஸ்தர்களும், நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம் முக்தார்)