புத்தளத்தில் சுகாதாரமான ஆரோக்கிய முறையில் சத்துணவு தயாரிப்பு பயிற்சியுடன் கூடிய கண்காட்சி
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் புத்தளம் கிளை அதன் இளந்தளிர் செயற்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தி வரும் சஞ்சீவி உணவுப் பயிற்சிகள் மூன்று நாட்கள் புத்தளம் கிராமிய அபிவிருத்தி நிலையத்திலும் (RDF) மற்றும் உணவு விளக்கக் கண்காட்சி நான்காம் நாள் வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் கூட்ட மண்டபத்திலும் இடம்பெற்றது .
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் அதன் இளந்தளிர் வேலை திட்டத்தை புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலக பிரிவு மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச செயலக பிரிவுகளில் கே.என்.எச் (KNH) நிறுவனத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தி வருகின்றது.
நாட்டில் இன்று மந்த போசனை பிள்ளைகள் அதிகரித்துள்ள நிலை தோன்றியுள்ளது . இந்த நிலையை போக்கி போஷாக்கான சத்துணவுகளை சுகாதார முறைப்படி குறைந்த செலவுகளில் தமது வீடுகளிலேயே எவ்வாறு உற்பத்தி செய்வது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் அவ்வாறான உணவு வகைகளும் இளந்தளிர் செயற்திட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளை கொண்டு சமைக்கப்பட்டு அவைகளும் காட்சிப்படுத்தப்பட்டதும் விசேட அம்சமாகும்.
அத்தோடு பாடசாலை மட்டங்களில் சமுதாய ரீதியிலும் நலிவுற்ற குடும்பத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத் தலைவர்கள், மாற்றுத்திறனாளிகளிக் குடும்ப பிள்ளைகளினது தேவை அடிப்படையில் அமைந்த சிறுவர் உரிமைகள் மட்டுமின்றி அவர்கள் அதனை அனுபவிப்பதற்கான உரிமைகளை மேம்படுத்தும் பணிகளையும் முன்னெடுத்தல். என்பவைகளையும் நோக்காக கொண்டும் மேற்படி இளந்தளிர் செயற்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
செயற்கை கலவைகள் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்தப்படாத சுகாதாரமான ஆரோக்கிய சத்துணவு தயாரிப்பு முறையிலான பயிற்சிகள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் இளந்தளிர் செயற்திட்டத்தின் சஞ்சீவி உணவு பயிற்சிகளை இச்செயற்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கு கொழும்பைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட துணை இயக்குநர் உணவு தொழில்நுட்ப பிரிவின் டொக்டர் ஜானகியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம் யூ எம் சனூன்)