உள்நாடு

பொய்யால் தொடர்ந்தும் ஆட்சி நடத்தி வர முடியாது. அரசாங்கத்தின் உண்மை நிலை தற்போது வெளிப்பட்டுள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எந்தவகையான வேலைத்திட்டம் மற்றும் எவ்வாறான ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பில் சகலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேடி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் சொன்னதையும், செய்வதையும் பார்க்கும் போது, ​​சொன்னதற்கும், செய்வதற்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது. நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு முன்னர் தெரிவித்தனர். குறைந்தது ஒரு இலட்சமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தாலும், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.40,000 ஆகவே அமைந்திருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 15000 ரூபாவில் இருந்து 25000 ரூபா ஆக 10000 ஆல் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அந்த பணம் கூட சரியாக கிடைக்கவில்லை என்று முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதனை பார்க்கிறோம். மின்கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டும், அதையும் நிறைவேற்ற இவர்களால் முடியவில்லை. இன்னும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் பேசவே முடியாது என்று அரசாங்கம் தற்போது கருத்துக்களை முன்வைத்து வருகிறது. மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் போது பொய்யால் ஆட்சி செய்யும் இந்த அரசாங்கத்தின் உண்மை நிலை மக்கள் மத்தியில் தற்போது வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டமொன்று நேற்று(13) நியோமல் பெரேரா தலைமையில் பமுனுகம பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பொருட்களின் விலையை குறைப்போம், வாழ்க்கைச் சுமையைக் குறைப்போம் என்று தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தாலும், இன்று தேங்காய் தட்டுப்பாடும் அரிசி தட்டுப்பாடும் நிலவி வருகின்றன. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று கூறிய இவர்கள், இன்று வெளிநாட்டிலிருந்து கூட அரிசியை இறக்குமதி செய்து வருகின்றனர். அரிசி தட்டுப்பாடுக்கும், தேங்காய் தட்டுப்பாடுக்கும் தேசிய ரீதியில் தீர்வு இல்லை. இவற்றை நாம் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும், தொழில் வல்லுனர்களும் வரிச்சுமையைக் குறைக்க பெரும் மக்கள் ஆணையை வழங்கினர். ஆனால் தற்போதைய அரசாங்கம் இதுவரை எந்த வரிச்சுமையையும் குறைக்கவில்லை. புதிய அரசாங்கம் IMF உடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டவில்லை. வரிச்சுமையை மாற்றுவதற்குப் பதிலாக, பெறுமதி சேர் வரியைக் குறைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை மறந்து செயல்பட்டு வருகிறது. ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு திருத்தப்படாமல் உள்ளவாறே இவர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இணக்கப்பாடு திருத்தப்படாத விடுத்து மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது என்பதையே இங்கு தொடர்ச்சியாக சுட்டிக்காட்ட விளைகிறேன். இவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *