உள்நாடு

சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர்..!

சமூக நீதிக் கட்சியானது, சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும் “ஒரு நீண்ட கால அரசியல் வேலைத்திட்டத்துடன் கட்சியை முன்னே நகர்த்த வேண்டும்” என்கின்ற அடிப்படையில் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சமூக நீதிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சகோதரர் நஜா முஹம்மத், இளைஞர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்க முன்வந்ததன் அடிப்படையில், கட்சியின் தலைமைத்துவ சபை நேற்று (14.12.2024) கூடி எடுத்த முடிவின் பிரகாரம், கட்சியின் புதிய தலைவராக சகோதரர் அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக செயலாளராக சமூக நீதிக் கட்சியில் தனது பயணத்தை தொடங்கிய அர்க்கம் முனீர், பின்னர் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் குறித்த அறிவிப்பை முதற்கட்டமாக வெளியிடவும், கட்சியின் ஏனைய முக்கிய பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் திட்டங்கள் மற்றும் கட்சியின் நீண்ட பயணத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களை அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடவும் கட்சி உத்தேசித்துள்ளது.

இவ்வாறு கட்சியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களானது, கட்சியின் அடுத்த பேராளர் மாநாடு வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-சமூக நீதிக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *