48 மணி நேரத்தில் திருடனைக் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார்..!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனையில் தொலைபேசி திருத்தும் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபரை 48 மணி நேரத்தில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரனைகளை தொடர்ந்து மாவடிச்சேனை பிரதேசத்தில் பதுங்கி இருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து களவாடப்பட்ட தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டல் ஆலோசனையில் குற்றத்தடுப்புப்பிரிவு உத்தியோகத்தர் திரு திணேஷ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த முன்னெடுப்பை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளிமாவட்டதைச் சேர்ந்தவர் என்பதுடன், பல்வேறு குற்ற செயலுடன் தொடர்புபட்டவர் என்றும் இவர் பொலிஸாரால் தேடப்பட்டவர் என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புபட்ட மேலும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)