லின்டேவின் சகலதுறை அசத்தலிலும் , மில்லரின் அதிரடியிலும் வீழ்ந்தது பாகிஸ்தான்
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிராக டேர்பனில் இடம்பெற்ற முதல் ரி20 போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடியும், லின்டேவின் சகலதுறையும் கைகொடுக்க 11 ஓட்டங்களால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
மூவகைத் தொடர்களில் பங்கேற்க தென்னாபிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதல் தொடரான இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (10) டேர்பனில் இரவுப் போட்டியாக இடம்பெற்து.
இதன் நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய முன்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் நடையைக் கட்ட மத்திய வரிசையில் வந்த டேவிட் மில்லர் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்துக் கட்டி 8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 40 பந்துகளில் 82 ஓட்டங்களையும், லின்டே 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 48 ஓட்டங்களையும் சேர்க்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சஷீன் அப்ரீடி மற்றும் அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து தென்னாபிரிக்க அணியால் நிர்ணயம் செய்யப்பட்ட 120 பந்துகளுக்கு 184 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த பாகிஸ்தான் அணிக்கு அணித்தலைவரான முஹம்மது ரிஸ்வான் மாத்திரம் அரைச்சதம் கடந்து வெற்றிக்காகப் போராடி 74 ஓட்டங்களை சேர்த்த போதிலும் ஏனைய வீரர்கள் பொறுப்பின்றி பெவிலியன் திரும்பியிருக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 11 ஓட்டங்களால் தோற்றுப் போனது. பந்துவீச்சில் துடுப்பாட்டத்தில் அசத்திய லின்டே 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வெற்றி கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 1:0 என முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)