லங்கா ரி10 போட்டிகள் இன்று கோலாகல ஆரம்பம்
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ள இலங்கையில் லங்கா டி10 சுப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
ஆறு அணிகள் பங்கேற்கும் குறித்த தொடர் இன்று (11) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமை வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த டி10 தொடரில் இலங்கையின் முன்னணி வீரர்கள் மற்றும் சர்வதேசத்தின் முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். தொடரில் கொழும்பு ஜாகுவர்ஸ், கோல் மார்வல்ஸ், ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கண்டி போல்ட்ஸ் மற்றும் நுவரெலியா கிங்ஸ் ஆகியே ஆறு அணிகள் மோதவுள்ளன.
இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தொடரின் ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. பி.ப. 4.00 மணிக்கு முதல் போட்டியும், பி.ப 6.15 மணிக்கு இரண்டாவது போட்டியும், இரவு 8.30 மணிக்கு மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன. இந்த நேர அடிப்படையிலேயே தினமும் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒரு அணிக்கு மொத்தமாக 7 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளேஓவ் சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் குவாலிபையர் -1 போட்டிக்கு தகுதிபெற்று அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.