உள்நாடு

யாழ் மாவட்டத்தில் பரவும் இனங்கானப்படாத காய்ச்சல்; இதுவரை ஐவர் பலி

யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோயியல் பிரிவி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை பெற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

நெல் விவசாயத்தை அண்டிய சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், சுரங்கங்கள் மற்றும் நீர் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அதிக அபாயம் காணப்படுகிறது.

கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகளுடன் வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீருடன் இரத்தம் வௌியேறல், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்ற நோய் அறிகுறிகளும் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடி சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம், இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதுடன் மரணம் கூட நிகழலாம் என எச்சரித்தார்.

வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளுக்கு செல்லும் மக்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய அவர்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஊமாக உரிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் குமுது வீரகோன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் சுகாயீனம் காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதில் இளம் வயதினரும் அடங்கியுள்ள நிலையில், எலிக்காய்ச்சலால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைகளின் முடிவிலேயே மரணங்களுக்கான உறுதியான காரணங்களை கூற முடியும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *