முகீமின் சுழலில் சிதறியது சிம்பாப்வே; தொடர் பாகிஸ்தான் வசமானது
சிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி30 தொடரின் 2ஆவது போட்டியில் சுபியான் முகீமின் மிரட்டலான சுழலின் மூலம் 87 பந்துகள் மீதிமிருக்க 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரின் ஒரு போட்டி மீதமிருக்க 2:0 என தொடரை தனதாக்கியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான வெள்ளைப் பந்துத் தொடரின் முதலில் நிறைவடைந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:1 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க தீர்மானமிக்க 2ஆவது போட்டி நேற்று முன்தினம் புலவாயோவில் இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணித்தலைவரான சிக்கந்தர் ராசா முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கமைய களம் நுழைந்த ஆரம்ப ஜோடி தமக்கிடையில் 37 ஓட்டங்களைப் பெற்றிருக்க மருமனி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் பிரியன் பெனட் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சிம்பாப்வேயின் விக்கெட் வீழ்ச்சி ஆரம்பித்தது. இதனிடையே பந்துவீச்சுக்கு அழைக்கப்பட்ட சுபியான் முகீம் சிம்பாப்வே வீரர்களை நிலைக்க விடாமல் பெவிலியன் திருப்பினார். இதனால் 12.4 ஓவர்களில் வெறும் 57 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது சிம்பாப்வே அணி. பந்துவீச்சில் சுபியான் முகீம் 3 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி பாகிஸ்தான் சார்பில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார்.
பின்னர் சிம்பாப்வே அணியால் நிர்ணயம் செய்யப்பட்ட 58 ஓட்டங்கள் என்ற மிகக் குறுகிய வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப ஜோடியான சைம் ஐயூப் 36 |ஓட்டங்களையும், ஒமைர் யூசுப் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் விளாச 5.3 ஓவர்களில் 61 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் மிக மிக இலகு வெற்றியைப் பதிவு செய்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என தனதாக்கிக் கொண்டது பாகிஸ்தான் அணி.
(அரபாத் பஹர்தீன்)