மூன்று வருடங்களின் பின்பே புதிய அரசியலமைப்பு
மாகாண சபை முறையும் நீக்கப்படாது.
தற்போது நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை நீக்கப்படாதென்றும்,புதிய அரசியலமைப்பு திட்டம் மூன்று வருடங்களின் பின்பே கொண்டு வரப்படுமென்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி.பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறைமை ஒழிக்கப்படுமென தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்பே கொண்டு வரப்படவுள்ளதால் அது பற்றி கலந்துரையாட நீண்ட அவகாசம் உள்ளதென்றும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரத்துக்கு மேல் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.