அரசாங்கம் தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்த விடயங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம். நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அவ்வாறே, நாட்டுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்போம். அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம், அதற்கான மாற்று வேலைத்திட்டங்களையும் முன்வைப்போம். இது தான் எமது கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய(03) பாராளுமன்ற சபை அமர்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தி வருகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளில் ஈடுபடுவது நியாயமான செயலல்ல. தற்போதைய அரசாங்கம் பெரும் மக்கள் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகத் துறையின் கூடிய ஆதரவு கிடைத்தது. தற்போது நீக்குவோம் என சொல்லப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குமுறைக்குட்படுத்துகின்றனர். சொன்னதை செய்யும் அரசாங்கமாக இருந்தால் இந்த அடக்குமுறையை நிறுத்த வேண்டும். அரசாங்கம் நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சமூக வலைதள ஆர்வலர்களை கைது செய்தாலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை அவ்வாறு கைது செய்ய முடியாது என கனம் நீதிபதிகள் கூட கூறியுள்ளனர். அவ்வாறே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் யாரையெல்லாம் கைது செய்யலாம் என்பது குறித்தும் இந்த அரசாங்கத்துக்கு அவர்கள் பாடமும் புகட்டியுள்ளனர் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு சலுகைகளை பெற்றுக் கொடுங்கள்.
இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரே 50% பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட பரேட்டே சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இதை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டித்து, இந்த தொழில் முயற்சியான்மையாளர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் தலைதூக்க மூலதன ரீதியாக பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தில் மூலதனம் வழங்கப்பட வேண்டும்.
கடனை ஓரளவேனும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை வழங்குங்கள்.
நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் துயரத்தினாலும் அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி, அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையை கூட்டுங்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புதிய வானிலை தகவல்களைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். உலக வங்கியும், ஜப்பானும் இதற்கான தொழிநுட்ப உபகரணங்களை வழங்க தயாராக உள்ளன. எனவே இவற்றை பெற வேண்டும். அத்துடன் பயிர் சேதத்தினால் நாட்டின் உணவு கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பயிர் சேதம் குறித்து முறையாக மதிப்பீடு செய்து, குறிப்பிட்ட நிவாரணத்தை உரியவர்களுக்கு வழங்க வேண்டும். புள்ளி விபரங்களை மாற்றாமல் இவற்றை சரியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 முன்னரைப் போன்றே என்றும் கல்விக்கும் சுகாதார துறைக்கும் நாம் எமது ஒத்துழைப்பை நல்குவோம்.
சுகாதாரத் துறையில் கடுமையான சிக்கல் நிலவி வருகிறது. தற்போது புற்றுநோய்க்கு வழங்கப்படும் இன்சுலின், சோடியம் பைகார்பனேட் போன்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இவற்றுக்கு விரைவான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை நாமும் பெற்றுத் தருவோம். முன்னரைப் போலவே சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்த எதிர்க்கட்சி என்றும் தயாராக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 வாக்குறுதியளித்த பிரகாரமே உர மானியத்தைப் பெற்றுக் கொடுங்கள்.
ரூ.25000 உர மானியமாக இன்னும் 217985 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.15000 இரண்டு சுற்றுகளில் முறையே 228000 மற்றும் 165000 பேருக்கும் கிடைக்க வேண்டியுள்ளது. கூறிய படியே 25,000 மானியம் முறையாக வழங்கப்படவில்லை. எனவே இதனை முறையாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
🟩 அரிசி தட்டுப்பாட்டுக்கு நிலையான திட்டம் தேவை.
அரிசி தட்டுப்பாட்டுக்கு முறையான தீர்வொன்று காண வேண்டும். வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய மாட்டோம் என கூறிய தற்போதைய ஆட்சியாளர்கள் மேடைகள் தோறும் கூறினர். இன்று அவர்களது அரசாங்கமே அரிசியை இறக்குமதி செய்து வருகிறது. பொருட்களின் விலைகள் கூட வேகமாக அதிகரித்து வருகின்றன. குடிமக்களின் உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளை புரிந்துகொண்டு, அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க நிலையான திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்த விடயத்தில் நிலைபேறானதொரு நிலையை பேணி வருவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்க்க மாட்டோம், மக்கள் ஆணை கிடைத்தவுடன் எரிபொருள் சூத்திரத்தை நீக்கு விட்டு, எரிபொருள் விலையைக் குறைப்போம் என்று சொன்னாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அரசாங்கம் சொன்னதைச் செய்வதாக இருந்தால் இதையும் உரியவாறு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
🟩 அடக்குமுறையை அனுமதியோம்.
நேற்றைய தினம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தாம் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 வருடம் கொரோனா காலப்பிரிவின் போது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இவர்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். நேற்றைய தினம் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தரப்பினர் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும் போது கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாட்டுக்கு வருவதை விடுத்து அடக்குமுறைக்கு வழிவகுப்பதை நாம் ஒருபோதும் அனுமதியோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 IMF இணக்கப்பாட்டை திருத்துங்கள்.
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்தி, 1 இலட்சத்தில் இருந்து அறவிடப்படும் வரியை 2 இலட்சத்தில் இருந்து அதிகரித்து, வெட் வரி குறைப்போம் என்று ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர். ஆனால் இதில் இன்று எந்த மாற்றமும் நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்த இதே முறை தொடர்வதை அங்கீகரிக்க முடியாது. எனவே, இந்த இணக்கப்பாட்டை தேர்தல் மேடைகளில் கூறியது போல் மக்களுக்கு சார்பான இணக்கப்பாடாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.