விளையாட்டு

இளையோர் ஆசியக் கிண்ணம்; ஷாருஜனின் சதத்தால் ஆப்கானை வீழ்த்தியது இலங்கை

19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஆசியக் கிண்ண தொடரின் குழு பி இலங்கை அணி பங்கேற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஷாருஜன் சன்முகநாதனின் பொறுப்பான சதம் கடந்த துடுப்பாட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணியை 131 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை.

ஆண்களுக்கான 19 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ண ஒருநாள் தொடர் கடந்த 29ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பித்திருந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்றிருக்க அதில் குழு பி இல் இலங்கை அணி நேபாள், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அதற்கேற்ப குழு பி இல் இலங்கை அணி முதல் போட்டியில் நேபாள் அணியை ஷாருஜனின் அரைச் சதம் கடந்த துடுப்பாட்டத்தின் மூலம் மிக இலகுவாக வீழ்த்தியிருந்தது. அதற்கமைய நேற்றைய தினம் (1) பலமிக்க ஆப்கானிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணியை சார்ஜாவில் வைத்து எதிர்கொண்டது இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களம் நுழைந்த இலங்கை இளையோர் அணிக்கு ஆரம்ப வீரர் டுல்னித் டக்அவுட் ஆகி ஏமாற்றினார். பின்னர் மற்றைய ஆரம்ப வீரரான புலிந்து பெரேராவுடன் இணைந்தார் ஷாருஜன் சண்முகநாதன்.

இலங்கைக்கு ஓட்டங்களை சேர்த்த இந்த இணையில் இருவரும் அரைச்சதம் கடந்து தமக்கிடையே 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருக்க 52 ஓட்டங்களுடன் புலின்டு பெரேரா ஆட்டமிழந்தார். இருப்பினும் தொடர்ந்தும் களத்திலிருந்த ஷாருஜன் இலங்கை அணிக்காக ஓட்டங்களை சேர்த்து அசத்தல் சதத்தை கடந்து 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை இளையோர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஹசன்பர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் சவால்மிக்க 244 என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் இளையோர் அணி இலங்கை இளையோரின் பந்துவீச்சில் சிக்கி 28.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 131 ஓட்டங்களால் தோற்றுப் போனது. துடுப்பாட்டத்தில் நஷீபுல்லா 33 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பிரவீன் மதீஷ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் நாயகனாக சதம் அடித்து இலங்கைக்கு வெற்றியைக் கொடுத்த ஷாருஜன் சண்முகநாதன் தெரிவானதுடன் , தொடராக 2ஆவது ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *