கட்டுரை

இதயங்கள் நொருங்கிய அந்தக் கணம்; “கதி கலங்கிய சம்மாந்துறை”

இதயங்கள் நொருங்கிய

அந்தக் கணம்…!

– கதி கலங்கிய சம்மாந்துறை –

++++++++++++++++++++++++++++

அனர்த்தங்கள் நிகழும் போது உயிர்ச் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் என பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்கள் வருகின்றமை இறைவனின் விதியிலன்றி வேறேதுமில்லை.

இருப்பினும் மனிதர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள அறிவின் பிரகாரம் சிந்தித்து செயற்பட வேண்டியதும், முன் ஆயத்தங்களுடன் பாதுகாப்பு உறுதி செயற்பட வேண்டியதும், பகுத்தறிந்து நகர வேண்டியதும் மனிதர்களாகிய நமது கடமையுமாகும்.

கடந்த 26.11.2024 செவ்வாயன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு – மாவடிப்பள்ளி A31 பிரதான வீதியை மறித்து மேலெழுந்த வெள்ளப் பெருக்கின்போது காரைதீவிலிருந்து சம்மாந்துறை, அம்பாரை, இறக்காமம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் உழவு இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஊடாகவுமே வீதியைக் கடக்கும் நிலை காணப்பட்டது.

இந் நிலைமையில் 26ம் திகதி மாலை வேளை ஓர் துயரச் சம்பவம் அப்பிரதேசத்தை நிகழ்கின்றது. கடும் காற்றும், மழையும் சூழ்ந்திருந்த வேளையில் உழவு இயந்திரம் ஊடாக பாதையைக் கடக்க முயன்ற மத்ரஸா மாணவர்கள் உட்பட சுமார் 15 பேரளவில் குறித்த உழவு இயந்திரத்தில் பயணிக்கின்ற போது காரைதீவு – அம்பாறை வீதி முதலாவது பஸ் தரிப்பிடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரம் செல்லும் போது உழவு இயந்திரம் தடம்புரண்டுள்ளது.

அலறல், கதறல் சத்தங்கள் ஒலித்த வேளை அடுத்த பயணங்களுக்காக காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த இடத்தை நோக்கி விரைந்த போதும் அவர்களால் குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு நீரினுள் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டு அங்கும், இங்குமாக தகவல்களை பகிர்ந்திருக்கின்றனர்.

இந் நிலையில், அதே வீதியூடாக எதேச்சையாக அம்பாறையை நோக்கி வந்த இராணுவ உயர் அதிகாரியின் வாகனத்தைக் கண்ணுற்ற பொதுமக்கள் செய்வதறியாது குறித்த இராணுவ அதிகாரியின் உதவியை நாடினர்.

உடனே அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரி அவர்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவு, இராணுவ முகாம்கள், கடற்படையினரை தொடர்பு கொண்டார். சுமார் 30 நிமிடங்களின் பின்னர் அவ்விடத்திற்கு பாதுகாப்புத் தரப்பினர் விரைந்திருக்கின்றனர்.

சுமார் 500 மீற்றர் அளவிலான வீதி இவ்வாறு நீரால் சூழப்பட்டு வெள்ளப்பெருக்கெடுத்து காணப்பட்டது. இவ் வீதியின் இருபுறங்களிலும் வயல் நிலங்களும் ஆறுகளும் இருக்க, பெரிய பாலம் ஒன்றும் சிறிய பாலங்கள் இரண்டும் காணப்படுவது இவ் வீதியால் பயணிக்கும் யாவரும் அறிந்ததே!

இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை இயந்திரத்தில் பயணம் செய்தோரில் நீச்சல் தெரிந்த மற்றும் ஏதோ ஒரு விதத்தில் தற்காப்பினை மேற்கொண்ட 8 பேர் தவிர்ந்த ஏனையோர் ஏதோ ஒரு வகையில் கரைசேர்க்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுளனர்.

ஏனைய எட்டு பேரும் தண்ணீரில் முழ்கிச் செல்வதையும், அவர்களின் கதறல் சத்தங்களையும் கண்களால் கண்டவர்கள் விடுகின்ற கண்ணீர்கள் நம் அனைவரது உள்ளங்களையும் உருக்கிச் செல்கிறது.

சம்பவத்தின் பின்னர் 26ம் திகதியிலிருந்து 30 ம் திகதி காலை நேரம் வரையிலும் முழுமையான தேடுதல் பணிகளை பொது மக்களும், பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டு மொத்தமாக எட்டு ஜனாஸாக்களையும் மீட்கும் பணியை தொடர்ந்தனர்.

இந்த தேடுதல் சம்பவத்திற்கு உறுதுணையாக பாதுகாப்புப் படையினரும், அவர்களோடு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி பேரவையினர், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரிச் சங்கம், கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள், காரைதீவு பிரதேச இளைஞர்கள், மீனவர்கள் என பலரும் உதவி ஒத்தாசைகள் புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த கோரச் சம்பவத்தில் 6 மத்ரஸா மாணவர்கள் உள்ளடங்கலாக மொத்தமாக எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களும், ஒருவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவருமாகும்.

இப்போது சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு விமர்சனங்கள் உலாவுகின்றன. அவற்றின் சுருக்கத்திலிருந்து நாம் எவருமே அனர்த்தங்களின் போது தற்காப்புக்கு தயாரில்லை என்பது புலனாகின்றது.

குறித்த சம்பவத்தின் போது பலராலும் குற்றம் சுமத்தப்பட்ட நிந்தவூர் காஷிபுல் உலும் அரபுக் கல்லூரி அதிபர் உட்பட நிர்வாகத்தினரால் கடந்த 27ம் திகதி சமூக ஊடகத்தினூடாக வழங்கப்பட்ட ஊடக அறிக்கையின் பிரகாரம்:

‘மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக மத்ரஸா கட்டிடத்தில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு காரணமாக மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டதையடுத்து, பிற்பட்ட நாட்களின் காலநிலையை கருத்திற்கொண்டு மத்ரஸா நிர்வாகத்தினரின் முடிவின் பிரகாரம் தாங்கள் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு அனுமதியெடுத்த பின்னர் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை பிரதேச மாணவர்களை அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்காக மத்ரஸா அதிபர் மற்றும் ஆசியர்கள் சிலரும் தனியார் பஸ் ஒன்றில் அனைத்து மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்று பிரதேச மாணவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு இரண்டாவதாக சம்மாந்துறை மாணவர்களை ஒப்படைக்கச் சென்றபோது காரைதீவு பிரதேசத்துடன் பயணங்கள் அனைத்தும் தடைப்பட்டு காணப்பட்டன.

அந்த நேரம் சம்மாந்துறை மாணவர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசியூடாக பேசி அனுமதியெடுத்த போது பெற்றார்கள் பாதைக்கு மறுபுறம் (அதாவது மாவடிப்பள்ளி எல்லை) நிற்பதாகவும், தாங்கள் இங்கே பிள்ளைகளை பாரம் எடுக்கிறோம் அனுப்பி வையுங்கள் என அனுமதிபெற்ற பின்னரே இவ்வாறு உழவு இயந்திரத்தில் ஏற்றிவிட்டதாகவும்; குறித்த வீதியை கடப்பதற்கு அந்த நிலைமையில் உழவு இயந்திரம் தவிர்ந்த எந்தவொரு மாற்று வழியும் பிரயாணத்துக்காக இருக்கவில்லை’ – எனவும் தெரிவித்திருந்தார்கள்.

இதே நேரம் சம்பவ இடத்தில் நின்ற பொது மக்கள் சிலர் வழங்கிய தகவலின் பிரகாரம்,

‘சம்பவம் நிகழும் போது அந்த இடத்தில் பொது மக்கள் மாத்திரமே நின்றதாகவும் அதிலும் குறிப்பாக குறித்த வீதியைக் கடப்பதற்கு தயாராக இருந்த பிரயாணிகள் மாத்திரமே நின்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டன.

எனினும், சம்பவம் நிகழ்ந்த அடுத்த கணம் பொது மக்களின் முயற்சியாலும், குறித்த வீதியால் எதிர்பாராதவிதமாக பயணம் செய்த இராணுவத்தினரின் உதவியினாலுமே சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரும், சிவில் அமைப்புக்களும் வரவழைக்கப்பட்டு களத்தில் இறங்கியுள்ளனர்.’

இந்த விடயங்கள் இறை நியதிக்கு உட்பட்டது என்பதை யாருமே மறுதலிக்க முடியாது.

இருப்பினும் மனித விஞ்ஞான அறிவின் பிரகாரம் சம்பவ தினத்திற்கு சில தினங்கள் முன்பிருந்தே வளிமண்டளவியல் தினைக்களத்தினால் வெளியிடப்பட்ட காலநிலை எச்சரிக்கை தகவல்கள் ஊடகங்கள் மூலம் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தன.

அந்த அறிக்கைகள் அத்தனையும் பௌதீக ரீதியில் எதிர்கூறலின் அசலாக இடம்பெற்றுக் கொண்டிருந்தமையும் யாவரும் அறிந்த விடயம்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 240 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

இது நாட்டின் கிழக்குக் கரைக்கு அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து நவம்பர் 27ஆம் திகதி ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. என வளிமண்டளவியல் தினைக்களத்தினால் தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு விட்டிருந்தது.

இவ்வாறு அனர்த்த எச்சரிக்கைகள், காலநிலை சீரின்மை, வெளிப் பிரயாணங்களை தவிர்க்கும் வகையிலான ஆலோசனைகள் மக்களுக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.

இந்த சீரற்ற காலநிலை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி நினைவூட்டல் செய்யப்பட்ட விடயமாகும்.

சாதாரணமாக அதிகரித்த மழை அம்பாறை மாவட்டத்தை அண்டிய பிரதேசங்களில் பெய்யுமாயின், டீ.எஸ். சேனாநாயக்க சமுத்திரம் நிரம்புமானால் அதனைச் சுற்றியுள்ள குளங்களின் வான் கதவுகள் கட்டம் கட்டமாக திறக்கப்படுவது வழமை.

அவ்வாறே கடந்த 25ம் திகதியும் சமுத்திரம் மற்றும் குளங்களிலுள்ள நீரின் அளவு செய்திகள் சமூக ஊடகங்கள், அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நீர்ப்பாசன திணைக்கள அறிவித்தலின் படி 25ம் திகதி 85.40 / 110 ft 380,800 / 770,000 என்ற நிலையில் காணப்பட்ட நீரின் அளவு அடுத்த நாள் 26ம் திகதி 91.60 / 110 ft 459,600 / 770,000 Acft என்ற நிலையில் உயர்வாக உள்ளதாகவும் அறிவித்தல்கள் பல வெளியானவண்ணம் இருந்தன.

அவ்வாறு நீர் நிரம்பியிருந்தும் எந்தவொரு குளங்களும் திறந்துவிடப்படாத நிலையில் பலத்த மழைவீழ்ச்சியால் குளங்களை ஊடறுத்தே நீர் வெள்ளப்பெருக்கெடுக்கத் தொடங்கின.

இப்படியான அசாதாரண காலநிலை நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான போக்குவரத்து பாதை வெள்ளத்தில் சிக்குவதானது, பல வருடங்களாக பலரும் அறிந்த விடயம்.

அப்படியிருந்தும், சம்பவ தினத்தன்று அதிகரித்த மழை மற்றும் காற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில்தான் சம்பவ இடத்தை அண்மித்த நிந்தவூர் காஷிபுல் உலூம் மத்ரஸா மாணவர்கள், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அப் பிரதேசத்தை அண்டிய பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்து பாதிப்பு உக்கிரமடைந்த பின்னர்தான் அரச தனியார், நிறுவன ஊழியர்கள் கடமைகளை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர்.

உண்மையிலே, இன்றுள்ள நமது சமூகத்தின் மனோ நிலை எவ்வாறென்றால் முன் ஆயத்தங்களுக்கு நாம் யாரும் கரிசனை கொள்வதில்லை.

அதே போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டால் அதற்கான படிப்பினையைக் கொண்டு அதிலிருந்து இன்னும் பாதுகாப்புக்களை எவ்வாறு விஸ்தரிப்பு என்பது குறித்து கணக்கெடுப்பதில்லை. சம்பவங்கள் நிகழ்கின்ற பொழுதுகளை மட்டும் துக்கமாக கடந்து விடுகின்ற மனோ நிலை மேலோங்கிவிட்டன.

கடந்த 2023 ஜூலை 10ம் திகதி மன்னம்பிட்டி பாலத்தினுள்ளே இவ்வாறு வெள்ளம் இல்லாத காலத்தில் ஒரு பாரிய விபத்து இடம்பெற்றது. அதுவும் பாலத்தின் பாதுகாப்பு சீரின்மையால் பஸ் ஒன்று வேகமாக வந்ததன் பிரகாரம் கீழிருந்த ஆற்றுக்குள் குடைசாய்ந்தது.

அதிலும் சுமார் 10 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 41 இற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானர்.

பிற்பட்ட நாட்கள் இற்றைக்கு ஒரு வருடங்களைத் தாண்டியும் குறித்த பாலத்திற்கு இருந்த கம்பி வேலிக்கு மேலதிகமாக கொஞ்சம் உயர்வாக சாரதி சமிக்ஞைக்காக சிவப்புக் கம்பிகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.

இப்போது இடம்பெற்ற சம்பவத்தில் 8 உயிர்கள் பலி!

இவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரமே நாம் அனைவரும் அலுப்பின்றி அது பற்றி பேசுவோம், பின்னர் யாரோ சிலர் மாத்திரம் சட்டம், வழக்கு என செல்வார்கள் அத்துடன் நாட்பட்ட கதையாக அவைகள் கடந்து சென்றுவிடுகின்றன.

இங்கு மறைவது சம்பவங்கள் மாத்திரம் தான், அவை சரித்திரங்களாகவும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகவும் அமைகின்றமை மறைமுகமாக சித்திரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான அனர்த்தனங்களை இந்த நவீன உலகத்திலும் கணக்கெடுக்காமல் ஒவ்வொரு முறையும் அமைகிற அரசாங்கங்களும், அரச அதிகாரிகளும் அலட்சியப்படுத்துவார்களாயின் பொதுமக்கள் அழிவின் பக்கம் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணங்களையும் நகர்த்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதே இவைகளின் வெளிப்பாடாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள்; அரசாங்த்தின் சிந்தனைக்கு இவ்வாறான விடயங்களை கொண்டுசென்று அனர்த்த நிலைமைகளை கருத்திலெடுத்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வழிசமைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

✍️ கியாஸ் ஏ புஹாரி

*களத்திலிருந்து தகவல் உதவி:*

🟪 எஸ்.எம். அமீர்

🟪 நூருள் ஹூதா உமர்

(✍ கியாஸ் ஏ புஹாரி)

களத்திலிருந்து தகவல் உதவி:
🟪 எஸ்.எம். அமீர்
🟪 நூருள் ஹூதா உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *