நாடு வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இருக்கும் சிறந்த வழி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
சுற்றுலாத் துறையானது நமது நாட்டின் அபிவிருத்திக்கு வேகமாக முன்னேறக்கூடியதொரு பிரதானமானதொரு துறையாகும். இந்தத் துறையில் பல சவால்கள் காணப்படுகின்றன. நமது நாடு குறிப்பாக மாநாட்டு நடவடிக்கைகள் சார் பல்வேறு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மையமாக முன்னேற வேண்டும். இதற்குத் தேவையான பக்க பலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன் நிமித்தம் அதிகளவு ஹோட்டல்கள் தேவைப்படுவதால், அரச தலையீட்டில் இதற்கான அதிகபட்ச தலையீட்டைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து நாம் முன்னோக்கிச் செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பிரபல மாணிக்கக்கல் வியாபாரியான திரு. வினில் வல்கம்பொலவினால் கொழும்பில் நேற்றைய தினம்(30) ஆரம்பிக்கப்பட்ட புதிய ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உயர் மட்ட சிறந்த சேவையை வழங்க, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தேறிய திறன்களை தன்னகத்தே கொண்ட ஊழியர்களை நாம் உருவாக்க வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள முப்பெரும் இடர்களால், நமது நாட்டின் தொழிலாளர் வளம் வெளிநாடுகளுக்கு நகரும் மூளைசாலிகள் வெளியேற்றம் நடந்து வருகிறது. இந்த மூளைசாலிகள் வெளியேற்றத்தை தற்காலிகமாகவேனும் குறைத்து, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்குவதன் மூலம் திறன்களும் ஆற்றலும் கொண்ட தொழிலாளர் வளத்தை நமது நாட்டில் பேணி வருவதற்கு நாம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹோட்டல் துறையை வலுப்படுத்த, 9 மாகாணங்களிலும் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல் பயிற்சி கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். வேறுபாடுகளை களைந்து, இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பாராது, ஒற்றுமையே நாட்டின் பலமாக கருதி, நாடு விழுந்துள்ள பாதாளத்தில் இருந்து மீண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இங்கு மேலும் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.