மோசமான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இலங்கை
டேர்பனில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 233 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. இத் தோல்வியால் 3 ஆம் இடத்திலிருந்த இலங்கை அணி 5ஆம் இடத்திற்கு கீழிறங்கியது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 27ஆம் திகதி டேர்பனின் ஆரம்பித்திருந்தது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி அணித் தலைவரான பவுமாவின் பெறுப்பான 70 ஓட்டங்களில் உதவியுடன் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் அஷித பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மார்கோ ஜென்ஸனின் வேகத்தில் நிலைக்கத்தவறி வந்த வேகத்தில் பெவிலியன் நடந்தனர். வெறுமனே 13.5 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து இலங்கை டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஓட்டங்கள் என்ற மோசமான சாதனையை பதிவு செய்து 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களையும், லஜிரு குமார 10 ஓட்டங்களையும் பெற மற்றைய 9 வீரர்களில் 5 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழக்க ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் நடையைக் கட்டியிருந்தனர். பந்து வீச்சில் மார்கோ ஜென்ஸன் 7 விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்டினார்.
பின்னர் 148 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு இளம் வீரரான ஸ்டெப்ஸ் சதம் கடந்து 122 ஓட்டங்களையும், பவுமா சதம் கடந்து 113 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 5 விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றிருக்க இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. பந்துவீச்சில் விஷ்வ மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் .
இதனால் தென்னாப்பிரிக்க அணியால் நிர்ணயிக்கப்பட்ட 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களால் தோற்றுப் போனது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 83 ஓட்டங்களையும் , தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மார்கோ ஜென்ஸன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியினால் தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என முன்னிலை பெற்றதுடன் , உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 5ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. இதனால் அவ் அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு சற்று பிரகாசமாகியுள்ளது. மேலும் இப்போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தினால் தோற்றுப் போன இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்கு கீழிறங்கியதுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் கேள்ளிக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)