வாழைச்சேனையின் வீரப் பெண்மணி 97 வயதில் மரணம்
வாழைச்சேனை 5 ஆம் வட்டாரத்தில் வாழ்ந்து வந்த 97 வயதுடைய சுலைகா உம்மா எனும் மூதாட்டி (28) ஆம் திகதி மரணடைந்துள்ளார்.
1927 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 13 ஆம் திகதி பிறந்த சுலைகா உம்மா 1940 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் தேவிப்பட்டினத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கணக்கப்பிள்ளை எனப்படும் முஹம்மது ஹனீபா என்பவரை மணமுடித்திருந்தார்.
வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த வட்டரப்பா எனப்படும் முஹம்மது இஸ்மாயில் மற்றும் நபீஸா உம்மாவின் மகளான இவர் 4 ஆண்கள் 6 பெண்கள் அடங்கலாக 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
இவருக்கு 45 பேரப்பிள்ளைகளும் 85 பூட்டிப் பிள்ளைகளும் 24 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
இவர் மூலம் மொத்தமாக 215 குடும்ப உறுப்பினர்கள் உண்டு. அதில் 195 பேர் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர்.
உள்ளூர்ப் போர்கள், உலகப் போர்கள் முதல் தீவிரவாதப் போர்கள் வரை அனைத்தையும் இறைவனின் உதவியால் கடந்து நீண்ட வருடங்கள் இந்த உலகில் வாழ்ந்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கணவர் உயிரிழந்த நிலையில் மரணிக்கும் வரையில் தனியாளாக குடும்பத்தை கட்டிக்காத்து வந்துள்ளார்.
இவர், இளம் வயதிலிருந்தே தொழில் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், அரசியல் உட்பட ஊரின் முக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியின் மாதர் சங்கத் தலைவியாகத் செயற்பட்டு வந்த இவர், சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் பால் கொடுக்கும் கேந்திர நிலையம் இவரிடமே காணப்பட்டது.
வீர மிக்க ஒரு பெண்மணியாக பல்வேறுபட்ட பொதுப் பணிகள், தர்மங்களை செய்து வந்த இவர் எல்லோராலும் அறியப்பட்ட ஒருவராக வாழ்ந்து மரணித்துள்ளார்.
இவரின், ஜனாஸா வியாழக்கிழமை (28) ஆம் திகதி ளுகர் தொழுகையின் பின்னர் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)