கம்ரான் குலாமின் பொறுப்பான சதத்தினால் சிம்பாப்வே விற்கு எதிரான தொடரை தனதாக்கியது பாகிஸ்தான்
சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் கம்ரான் குலாமின் பொறுப்பான சதத்தின் உதவியுடன் 99 ஓட்டங்களால் வெற்றி பெற்ற முஹம்மது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடரை 2:1 என கைப்பற்றியது.
சிம்பாப்வேவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே அணியும் , 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றிருக்க தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று புலவாயோவில் இடம்பெற்றது. இதன் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
அதற்கேற்ப களம் நுழைந்த பாகிஸ்தான் வீரர்களில் சைம் ஐயூப் மற்றும் அப்துல்லாஹ் ஷபீக் ஆகியோர் முறையே 31 மற்றும் 50 ஓட்டங்களை சேர்த்து சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். பின்னர் வந்த கம்ரான் குலாம் பொறுப்புடன் நிலைத்திருந்து ஆடி தனது கன்னி ஒருநாள் சதம் பதிவு செய்து 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றைய வீரர்களில் ரிஸ்வான் (37), சல்மான் அலி அஹா (30) மற்றும் டய்யாப் தாஹிர் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 303 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதற்கேற்ப பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 304 ஓட்டங்கள் என்ற சவால் மிக்க வெற்றி ஓட்ட இலக்கினை நோக்கி பதிலளித்த சிம்பாப்வே அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தமையால் அவர்களால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவரான கிரேக் எர்வின் 51ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில் சைம் ஐயூப், அப்ரார், ரௌப் மற்றும் அமீர் ஜமால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
இதனால் இப்போட்டியின் 99 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:1 என தன் வசப்படுத்திக் கொண்டது. இப்போட்டியின் நாயகனாக கம்ரான் குலாமும், இத் தொடரின் நாயகனாக சைம் ஐயூபும் தெரிவாகினர். மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் பாகிஸ்தான் அணியை சல்மான் அலி அஹா வழிநடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)