நூறைக் கடந்தார் பிரபாத் ஜெயசூரிய
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 5ஆம் இடத்தையும், இலங்கை வீரர்கள் வரிசையில் முதலாம் இடத்தையும் தனதாக்கினார் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜெயசூரிய.
இலங்கை அணியின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜெயசூரிய சமீப காலமாக இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றி வருகின்றார். அதற்கேற்ப இலங்கை அணி தற்சமயம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதில் பிரபாத் ஜெயசூரிய 2 விக்கெட்டுகளை வீழ்த்த அவரின் மொத்த விக்கெட்டுக்களின் எண்ணிக்கு 99 ஆக மாறியது.
இந்நிலையில் இப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்க அவ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டொனி டி ஷொர்சியின் விக்கெட்டை பிரபாத் ஜெயசூரிய கைப்பற்றிக் கொள்ள சர்வதேச டெஸ்ட் அரங்கில் பிரபாத் ஜெயசூரிய 32ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 100ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் உலக டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 5ஆம் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
மேலும் இலங்கைப் பந்துவீச்சாளர்களில் மிகக் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி அப்பட்டியலில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். மேலும் 33 வயதான பிரபாத் ஜெயசூரிய இதுவரையில் பத்து விக்கெட்டுக்கள் பிரதியை 2 முறையும், 5 விக்கெட்டுக்கள் பிரதியை 9 முறையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் இவரது மிகச் சிறந்த பந்துவீச்சும் பிரதியாக 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)