“வேதாந்தி” சேகு இஸ்ஸதீனின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பெரும் இடைவெளி; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்
முஸ்லிம் விடுதலை அரசியலில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு நிகராக மிகப் பிரதான பாத்திரம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட இலக்கியவாதியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில், “இறைவனின் அழைப்பை மறுக்கும் சக்தி எந்தவொரு ஆன்மாக்களுக்கும் இல்லை. எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்கள் சென்ற வழியில், என்றோ ஒருநாள் நாமும் செல்வதற்கான இறை நியதியுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்.
இருந்தபோதும், அன்னாரது இழப்பு இந்தச் சூழலில் ஏற்பட்டிருப்பது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களை ஆட்டம் காணச் செய்திருக்கும் என நான் கருதுகின்றேன். இருந்தாலும், அன்னாரின் சமூக விடுதலை தூது, தத்துவங்களை எடுத்துச் செல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லில் தலைமைகளுக்கும் உண்டு என எண்ணுகின்றேன்.
சிலகாலம் எமது கட்சியுடனும் இணங்கிச் செயற்பட்ட இவர், எனது தனிப்பட்ட நெருக்கத்துக்கும் ஆளாகியவர். எமது கட்சியின் அரசியல் பாதையை வெகுவாகப் பாராட்டியவர். இவரது வழிகாட்டல்கள் ஒருகாலத்தில் எமது கட்சிக்கு பெரும் தைரியம் ஊட்டியது.
தேசிய அரசியலில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நல்ல பல அரசியல் தத்துவங்களையும் வியூகங்களையும் வகுத்துக்கொள்வதற்கு, அன்னார் இல்லாதுள்ளமை, எமக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் வல்ல இறைவன்! அன்னாரின் சமூகப் பணிகளை பொருந்திக்கொள்ள வேண்டும் எனவும் பிழைகளைப் பொறுத்துக்கொண்டு மறுமையில், நல்லதொரு நிலைக்கு அன்னாரை உயர்த்த வேண்டுமெனவும் பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.