வவுனியாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று (29) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்தில், வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருப்பவர்கள் மற்றும் வெளியேற முடியாமல் குடியிருப்புக்களுக்குள் தங்கியிருப்பவர்களுக்கு சரியான முறையில் உணவுகள் வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு, அவர்களை அடையாளங்கண்டு, தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன், தொடர்ச்சியாக ஒரு வார காலத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், வெள்ளப் பாதிப்பினால் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
(இர்ஷாத் ரஹ்மத்துல்லா)