முஸ்லிம்களின் பிரதான அரசியல் இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்க்கப் பாடுபட்டவர் சேகு இஸ்ஸதீன்
அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
முன்னாள் அமைச்சரும் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான ‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீன் இலங்கை அரசியலில் தனித்துவமிக்க ஒருவராவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சேகு இஸ்ஸதீனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இராஜாங்க அமைச்சராக,
பாராளுமன்ற உறுப்பினராக, வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க் கட்சித் தலைவராக, இலங்கை அரசியலில் முக்கிய வகிபாகம் வகித்த சேகு இஸ்ஸதீன், ஊடகப் பிரதி அமைச்சராக இருந்தபோது தமிழ் பேசும் ஊடகவியலாளர்களோடு நெருங்கிச் செயற்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்த பல வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். முஸ்லிம்களின் பிரதான அரசியல் இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளராகப் பணிபுரிந்த இவர், கட்சியின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரபுடன் நெருங்கிச் செயற்பட்டடு அக்கட்சியை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றை எழுதும் போது அவரது பங்களிப்புக்கு விசேட இடம் ஒதுக்கப்படுவது அவசியமாகும். அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹும் சேகு இஸ்ஸதீன், சிறந்ததொரு இலக்கியவாதியுமாவார். ‘வேதாந்தி’ எனும் புனைப் பெயருடன் இலக்கியத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. முன்னாள் ஊடகப் பிரதியமைச்சர் பதவிக்கு மேலதிகமாக ஏற்றுமதி அபிவிருத்தி பிரதியமைச்சராகப் பணிபுரிந்து அத்துறையின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.
இவருடைய சேவைகளில் முக்கியமாக அக்கரைப்பற்றில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிறை எப்.எம். வானொலியை முக்கியமாகக் குறிப்பிடலாம். இன்று பிராந்திய வானொலிகளில் மிகச் சிறப்பாக இயங்கிக் ஒரு வானொலியாக மர்ஹும் சேகு இஸ்ஸதீன் ஆரம்பித்த பிறை எப்.எம். வானொலி அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திக்குமாறு பிரார்த்திக்குமாறு சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.
மர்ஹும் சேகு இஸ்ஸதீனின் மறைவினால் வேதனைப்படும்அன்பு மனைவி பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா வரும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)