உள்நாடு

ஈடு செய்ய முடியாத இழப்பு; சேகுவின் மறைவுக்கு இம்தியாஸ் அனுதாபம்

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் தனது செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக,பாராளுமன்ற உறுப்பினராக,பிரதி அமைச்சராக,ராஜாங்க அமைச்சராக,கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவிகள் வகித்து மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் விசேடமாக கிலக்கிற்கும் ஆற்றிய பணிகள் மகத்தானது.

கிழக்கு ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள் பலர்.அவர்களில் ஒருவராக மர்ஹூம் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் திகழ்ந்தார். மனித நேயம் மிக்க மகத்தான மனிதராக அவர் விளங்கினார்.

அரசியல் மூலம் சமூகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மகா புருஷராவார். முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக வேண்டி தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். அவரிடம் கற்க வேண்டிய அநேகம் உள்ளன.

சிறந்த தலைமைத்துவப் பண்புகளை கொண்டிருந்த மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் சகல சமூகங்களாலும் நன்கு மதிக்கப்பட்டவராக விளங்கினார். அரசியல்,நீதியும் நேர்மையும்,மாற்று கட்சி அரசியல்வாதிகளை மதிக்கும் நல்ல பண்புகளையும் கொண்டவராகவும் காணப்பட்ட இவரது ஆளுமை பணிகள் காலத்தால் அழியாதவை. பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிழலாடும்.

மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் என்னோடு மிக நெருக்கமாகவே கடைசி வரை இருந்தார். அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரசாரத்திற்காக சென்ற சமயம் வீடு சென்று நோய் விசாரித்தேன். தனது கடைசி தருவாயிலும் கூட சமூகத்தின் எதிர்கால விமோசனம் பற்றியதாகவே இருந்தது.

நீதி,நேர்மை,தக்வா,இகலாஸான பண்புகளை கொண்ட இவர் அரசியலோடு பொதுப்பணியிலும் விசேடமாக கலை இலக்கியப் பணியிலும் ஈடுபட்டார்.இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளார். ஆன்மீகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் மறுமை வாழ்வுக்காக நிறையவே சம்பாதித்திருக்கிறார். எல்லாம் வல்ல நாயன் அவர் செய்த நற்பணிகளை அங்கீகரித்து மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக. ஆமீன்!

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *