விளையாட்டு

ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோன இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்கள்; விலை போகாத துடுப்பாட்டவீரர்கள்; 13 வயதில் களம் காணும் வைபவ்

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் 6 வீரர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 13 வயதேயான இந்திய வீரர் ஒருவரும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் 2025ஆம் இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் ரி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் மத்திய கிழக்கின் தலைமையகமாகக் கருதப்படும் சவுதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய 10 அணியின் உரிமையாளர்களும், அணிகளின் பயிற்றுவிப்பாளர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் இலங்கை வீரர்களும் விண்ணப்பித்திருந்தனர். அதற்கமைய ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஏலத்தில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான வனிந்து ஹஸரங்கவினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய நாணயப்படி 5.25 கோடி (இலங்கை நாணயப்படி 18.13 கோடி) ரூபாய்களுக்கு கொள்வனவு செய்திருந்தது.

அடுத்து இலங்கையின் மற்றுமொரு சுழல்பந்து வீச்சாளரும் கடந்த இரு ஐ.பி.எல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக விளையாடிய மகேஷ் தீக்சனவை (இலங்கை நாணயப்படி 15.16 கோடி ரூபாய்களுக்கு) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூலம் கொள்வனவு செய்திருக்க இலங்கையின் சுழல்பந்து நட்சத்திரங்கள் இரண்டும் ரோயல்ஸ் அணிக்காக களம் காணவுள்ளது.

மேலும் திங்கள்கிழமை இடம்பெற்ற ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரும் கடந்த முறை கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காவும் விளையாடிய வீரரான துஷ்மன்த சமீர இம்முறை டெல்லி கெபிடல்ஸ் அணி மூலம் இந்திய நாணயப்படி 75 லட்சம் என்ற அடிப்படை விளைக்கு வாங்கப்பட்டார்.பின்னர் இதே தொகைக்கு சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி மூலம் இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் ஏலமெடுக்கப்பட்டடை சுட்டிக்காட்டத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வீரர்கள் ஏலத்தில் சிலிங்கா முறையில் பந்துவீசும் இலங்கை அணியின் நுவான் துஷார விராட் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் இந்திய நாணயப்படி 1.6 கோடி (இலங்கை நாணயப்படி 5.52 கோடி) ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டதோடுஇ அறிமுக வேகப்பந்துவீச்சாளரான எஷான் மாலிங்க சன்ரைஸர்ஸ் அணியினால் 1.2 கோடி (இலங்கை நாணயப்படி 4.14 கோடி) ரூபாய்களுக்கு வாங்கப்பட்டிருந்தார்.

மேலும் இலங்கை அணியின் நட்சத்திரத்திர துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ் , குசல் பெரேரா, பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக்க ஆகியோரை எந்த அணிகளும் கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இடம்பெற்று முடிந்த ஏலத்தில் ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறையாக வயது குறைந்த வீரர் ஒருவர் ஏலம் எடுக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான வைபவி சூர்யவன்ஷி எனும் இளம் வீரர் இந்தச் சாதனைக்குச் சொந்தமாகியுள்ளார். இவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது ஒரு கோடியே 10 லட்சம் இந்திய ரூபாய்களுக்கு கொள்வனவு செய்துள்ளது.இதன் மூலம் ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்த பின்னர் பிறந்து அத் தொடரிலே விளையாடத் தகுதி பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையினையும் வைபவ் சூர்யவன்ஷி பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *