தனியார் பஸ் நிலைய ஊழியர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்கினால் பஸ் அனுமதிப் பத்திரம் இரத்து; மத்திய மாகாணத்தில் நடவடிக்கை
மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பஸ் நிலைய ஊழியர்களுக்கு சட்டவிரோதமாகப் பணம் வழங்கினால், அவ்வாறு வழங்கும் தனியார் பஸ்களின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மத்திய மாகாண போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் பி. எஸ். கே.லங்கேஸ்வரன் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ள தனியார் பேருந்து நிலையங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரக் கண்காணிப்பாளர்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடம் சட்ட விரோதமா பணம் அறவிடுவதாக பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தலைவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மாகாணத்தில் உள்ள தனியார் பேருந்து நிலையங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரக் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், அவ்வாறான நிலை இருக்கும் போது அந்த அதிகாரிகளுக்கு பணம் வழங்குவது குற்றமாகும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
( ரஷீத் எம். றியாழ்)