நாளைய உலகுக்கு நற் பிரஜைகளை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பு; அஷ்ஷெய்க் மெளலவி ஸக்கி (அலவிய்யதுல் காதிரி)
வரலாற்று புகழ் பெற்ற பேருவளை கெச்சிமலை தர்கா பள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கும் அலவியா இளைஞர் முன்னணி, “இஸ்லாமிய அடிப்படைகள்” எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் வதிவிடப் பயிற்சி செயலமர்வொன்றை கெச்சிமலை பள்ளிவாசலில் நடாத்தியது.
சுன்னத்வல் ஜமா அத்தின் ஆத்மீகத்துறைக்கான அடிப்படைப் பயிற்சிகளை வழங்கி இளம் வாலிப சந்ததிகளை புடம் போடும் பயிற்சிப்பட்டறையாக அமைந்த இந்த செயலமர்வு இம் மாதம் 26, 27 சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களையும் உள்ளடக்கி ஒரு நாள் செயலமர்வாக இடம் பெற்றது.
பேருவளையையும் அதனை அண்டிய பகுதிகளையும் சேர்ந்த பாடசாலைகளில், தரம் 6,7,8 களில் பயிலும் சுமார் 50 இளம் மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. மறுநாள் மாலை 5:00 மணியையும் தாண்டி நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தன.
சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ். மெளலவி அல்ஹாஜ் ஸக்கி அஹ்மத் பின் அஷ்ஷெய்ஹ். காலிப் அலவி (அலவியத்துல் காதிரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய உலமாக்கள் பலரதும், உரைகள் இடம் பெற்றன. இறுதியில் கலந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சீனன்கோட்டை ஜாமிய்யத்துல் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி- பீ.ஏ) உட்பட உலமாக்கள், பிரமுகர்கள், அலவிய்யா இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் என பலரும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
தலைமை வகித்த சங்கைக்குரிய ஸக்கி அஹ்மத் ஹாஜியாரின் உரையில்,
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், கணவர்கள், தந்தைகள், வழிகாட்டிகள் ஆத்மீக பெரியார்கள், ஆசிரியர்கள்… என்று பல பொறுப்புக்களையும் சுமக்கக் கூடியவர்களாகின்றனர். எனவே நாளைய உலகுக்கு இவர்களை நற்பிரஜைகளாக உருவாக்கிக் கொடுக்கும் தார்மீகப் பொறுப்பு எங்கள் அனைவர் கைகளில் தான் உள்ளது.
வருங்கால சந்ததிகளின் ஆத்மா, சிந்தனை, செயற்பாடுகள், குடும்ப வாழ்வு, சுற்றுச் சூழல், சமூகச் செயற்பாடுகள் உள்ளிட்ட சகல துறைகளையும் தூய்மைப்படுத்தி, உடல், உள, சமூக, ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்துவது குறித்த பயிற்சியை சூபித்துவம் எமக்கு கற்றுத்தருகிறது. அந்த அடிப்படையில் இளைஞர், யுவதிகளை சிறந்த சமூகமாக உருவாக்கும் பொறுப்புதாரிகள் நாம். இந்த பக்குவமே இந்த பாசறையில் வழங்கப்படுகிறது.
உள்ளம் சுருங்கி விடக்கூடாது. அதற்காக நல்ல சிந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டும். அப்போதுதான் உள்ளம் தூய்மைப்படும். அதனால் மனிதனின் செயல்கள் நல்லனவாக வழி பிறக்கும்.
உள்ளத்தின் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. எனவே உடற்பயிற்சியும் எங்கள் சந்ததிகளுக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்.
இன்றைய சிறுவர்கள் இன்று லிபரலிஸத்தின் பால் விரைந்து கொண்டிருக்கின்றார்கள். அதாவது, இஸ்லாத்தின் புதிய உலக ஒழுங்கில் இரையாகி மத அனுஷ்டானங்களைக் கடைப் பிடிப்பதில் நவீன மயமாக்கலை நாடிச் செல்லும் பேராபத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். போதைப் பாவனை, சமூக ஊடக சீர்கேடுகளிலும் சிக்கித் தவிக்கும் ஆபத்தைக் காண்கிறோம். இதனால் சன்மார்க்க பண்பாடுகளைத்துறந்து அனாசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் வலிமார் பெருந்தகைகள் அடங்கப்பட்டுள்ள இந்த ஆண்மீகச் சூழலில் எமது இளம் சந்ததிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக, இந்தப் பயிற்சிப் பட்டறை அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.
தொடர்ந்தும் அஷ்ஷெய்ஹ். ஸக்கி அஹ்மத் உரையாற்றிய போது, மேலும் எமது பயிற்சிப் பாசறையில் உடலும், உள்ளமும் தூய்மை அடைவதற்குரிய பலதரப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆனை அனுதினமும் ஓதுதல், அதனுடன் உறவாடுதல், எங்கள் முன்னோடிகளான ஸுபி மார்கள், வலிமார்கள் காட்டித்தந்த அன்றாட திக்ருகள், அவ்ராதுகள் போன்ற ஆத்மீக கிரிகைகளை அனுதினமும் ஓதி வருதல். இவைகளாலேயே எங்கள் உள்ளம் தூய்மை பெறுகிறது. பக்குவப்படுத்தப்படுகிறது.
உடலில் ஒரு சதைப் பிண்டம் உள்ளது. அது சீராகிவிட்டால் முழு உடலும் சீராகிவிடும். அது சீர்கெட்டு விட்டால் உடல் முழுவதும் சீர்கெட்டு விடும். அதுதான் இதயம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது உள்ளத்தை தூய்மைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் மிகவும் உண்மையான ஹதீஸாகும்.
நல்ல பண்பாடுகள், நல்ல சமூக வேலைகளில் ஈடுபடுதல் இதன் மூலமாக ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும். இளைஞர்களை உள்ளத்தோடு உடலியல் ரீதியாகவும் வலுவூட்டவும் எமது மயிற்சிப் பாசறை வழி வகுத்துக் கொடுக்கிறது. எமது பயிற்சித்திட்டத்தில் உடற் பயிற்சி, விளையாட்டு உள்ளிட்ட செயற்பாடுகளும் அடங்குகின்றன. பிள்ளைகள் நல்ல முறையில் புடம் போடப்படுவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். சமூகம் என்ற வகையிலும் எங்கள் எல்லோரதும் பொறுப்பாக உள்ளது. இவற்றைத்தான் நாம் இங்கு செய்து வருகிறோம்.
மேலும், ஒரு நல்ல முஸ்லிமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை பயிற்சியில் ஈடுபட்ட எங்கள் பிள்ளைகள் இங்கு கற்றுக் கொண்டார்கள். நாம் அடிப்படை இஸ்லாமிய கல்வி, பிக்ஹ், ஒவ்வொரு அமலுக்குமான துஆ பிரார்த்தனைகள், தொழுகை நடாத்துவது, தலைமைத்துவ பயிற்சிகள், மலசலகூடம், இல்லறை ஒழுங்குகள், சாப்பாட்டு ஒழுங்குகள், மஜ்லிஸ்களில் கலந்து சிறப்பிப்பது போன்ற பல துறைகளிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென செயன்முறைப் பயிற்சிகள் இங்கு மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டன.
இவற்றுக்காக துறைசார் வளவாளர்கள், உளவியல் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள், விளையாட்டுத்துறை அனுபம் பெற்ற வீரர்கள் ஆகியோராலேயே இங்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பூரணத்துவம் பெற்ற பயிற்சிக் களமாகவே அமைந்தது என்று குறிப்பிடலாம்.
இதனால் இச் செயலமர்வு, கலந்து கொண்ட சிறார்களுக்கு மிகவும் வெற்றிகரமாகவே அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்களால் சிறார்களுக்கு ஒப்பீட்டளவிலான வழிகாட்டுதல்கள் வழங்கியிருக்கிறோம். இனி தொடர்ந்து பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகள்- இவர்களை எதிர்கால மகான்கள் என்ற வகையில் அவர்களைப் பக்குவப்படுத்தி, எங்களால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் அவர்களுடைய வாழ்வில் பேணி கடைபிடித்தொழுக ஆர்வமூட்டும்கள்; வழிகாட்டுங்கள்; பக்குவப்படுத்துங்கள்.
உங்களோடு நாம் அனைவரும் சேர்ந்து சிறந்ததோர் இளம் சமுதாயம் ஒன்றை உருவாக்குவோம். எதிர்காலத்தில் நற்பிரஜைகளால் நிரம்பி எளிமையான உலகைக் காண்போம். இன் ஷா அல்லாஹ்! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். உங்கள் கைகளில் அமானிதங்களாக பிள்ளைகள் உள்ளனர் என்பதை மறந்து விட வேண்டாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், நீங்கள் ஒவ்வோருவரும் பொறுப்புதாரிகளாக உள்ளீர்கள். ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பிற்கு மேளாண்மையாளர்கள் ஆவீர்கள். தலைவரோ தனது மக்கள் மீது பொறுப்பாளராக, பொறுப்புடையவராக இருக்கிறார். கணவர் தனது குடும்பத்தின் மீதும், மனைவியோ தனது கணவன் வீட்டில் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நீண்ட ஹதீஸ் உணர்த்துவதை சிந்தித்து ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும். அல்லாஹுத்தஆலா இந்த நற்செயலை மீஸானில் பாரம் மிகுந்த செயலாக ஆக்கி அருள்வானாக!
(பேருவளை பீ.எம் முக்தார்)