கடும் மழை நுவரெலியாவையும் பாதித்தது
கடும் மழையுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா விக்டோரியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா விக்டோரியா பூங்கா, நுவரெலியா ரேஸ்கோர்ஸ் தோட்ட வீட்டுத்தொகுதி என்பன நீரில் மூழ்கியதுடன், நுவரெலியா ராகலை பிரதான வீதியும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையினால் மரங்கள் சரிந்து விழுதல் ,மற்றும் மண்சரிவு உள்ளிட்ட பல அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களை ஓட்டும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்..
(ரஷீத் எம். றியாழ்)