ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தொடர்பானஉலகளாவிய மாநாடு சவுதி அரேபியாவில்
‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தொடர்பான சர்வதேச தினம் 24 ஆம் (நவம்பர்) திகதியாகும். அதனையொட்டி சவுதி அரேபியா 24 ஆம் 25 ஆம் திகதி ரியாத் நகரில் உலகளாவிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் துறைசார் மருத்துவ நிபுணர்கள், புத்திஜீவிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது’.
‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை மருத்துவ சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை முப்பது வருடமாக முன்னெடுத்துவரும் சவுதி அறுபதுக்கும் மேற்பட்டவர்களை பிரித்தெடுத்து சாதாரண வாழ்வை பெற்றுக்கொடுத்துள்ளது’.
உலகின் பல பாகங்களிலும் ஒட்டிப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அது ஏக அல்லாஹ்வின் ஏற்பாட்டில் நடப்பவை. அவர்கள் பிறந்து இவ்வுலகில் வாழும் போது பல அசெளகரியங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்வதை பார்க்கக்கூடியதாக உள்ளது. அன்றாட அடிப்படை வேலைகளைக் கூட செய்து கொள்ளவும் அவர்கள் சிரமப்படுகின்றனர். அச்சிரமங்களைக் கண்டு அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் மாத்திரமல்லாமல் அவர்களைப் பார்க்கின்ற பலரும் மனவேதனை அடைகின்றனர்.
அவர்களது நலன்கள் விடயத்தில் உலகில் பல தப்பினரும் அக்கறை செலுத்தினாலும் அத்தகையவர்கள் தொடர்பில் சவுதி அரேபியா ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. முற்றிலும் மனிதாபிமானக் கண் கொண்டு நோக்கும் சவுதி உலகில் அனைவராலும் பெரிதும் பாராட்டப்படப்படக்கூடியதாக விளங்குகிறது.
உலகில் இரட்டையர்களாக ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளை அவர்களது குடும்பம் சகிதம் சவுதி அரேபியாவிற்கு விஷேட விமானங்கள் மூலம் அழைத்து வந்து அவர்களை சவுதி அரேபியாவின் அதி நவீன வைத்தியசாலைகளில் விஷேட மருத்துவ நிபுணர்கள் ஊடாக மிகத் துள்ளியமான முறையில் சத்திர சிகிச்சை செய்து பிரித்தெடுக்கிறார்கள். இந்த அரிய பணி சவுதி அரேபியாவின் வைத்திய கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆவின் தலைமையிலான விஷேட வைத்திய குழாம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சவுதியின் இந்த மனிதாபிமானப் பணி உலகில் ஒரு மைற்கல்லாக விளங்குகிறது.
இந்த மனிதாபிமானப் பணியை கடந்த 30 வருடங்களாக சவுதி முன்னெடுக்கிறது. இக்காலப்பகுதிக்குள் ஒட்டிப் பிறந்த அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் சவுதியில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இது சவுதி மருத்துவ நிபுணர்களின் மாபெரும் சாதனையாகும்.
இப்பணியை மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம் வெற்றிகரமாக முன்னெடுக்கிறது. இது ஒரு சாதாரண பணியல்ல. பாரிய சவால் மிக்க பணியாகும். இருந்தும் இப்பணியை சவுதி தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. தற்போது இம்மையத்தின் நிறைவேற்று பணிப்பாளராக வைத்திய கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆ பணியாற்றுகிறார். அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட முன்பிருந்தே இப்பாரிய பொறுப்பை சவுதி மருத்துவ நிபுணர்கள் திறம்பட செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கான சர்வதேச மாநாட்டை அண்மையில் சவுதி பிரகடனப்படுத்தியது. அதனடிப்படையில் நவம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் ரியாத் மாநகரில் சர்வதேச மாநாடு நடாத்தப்படுகிறது. அத்தோடு இம்மாநாடு சவுதியில் நடாத்தப்பட ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை மருத்துவ சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் 30வது ஆண்டு நிறைவும் காரணமாக அமைந்திருக்கிறது.
ரியாத் நகரில் இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் இத்துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட விற்பன்னர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாடு உலக மக்களது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் சவுதி அரேபியா இன, மத பேதம், ஏழை பணக்காரன் என்ற பேதம் பாராமல் உலகின் பல பாகங்களில் இருந்தும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை தனது நாட்டின் சொந்த செலவில் அழைத்து வந்து அவர்களைப் பிரித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து அதி நவீன மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகிறது.
அந்தவகையில் இச்சர்வதேச மாநாடு இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் சஊத்தின் மேற்பார்வையில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்தின் தலைமையில் ஆரம்பமாகவிருக்கிறது.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்காக சவுதியில் நடத்தப்படும் தனித்துவமானதும் உலகில் முதல் முறையானதுமான மாநாடு இதுவேயாகும். இது மனிதாபிமானத்தில் சர்வதேச தலைமையை பெற்றுள்ள சவுதியின் மருத்துவ சிறப்பை எடுத்துக்காட்டக்கூடியதக உள்ளது.
சவுதி மருத்துவத் துறையில் பாரிய வளர்ச்சிய கண்ட நாடாக விளங்குகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கான சவுதி அரேபியாவின் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சவுதி மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இரட்டையர்களின் குடும்பத்திற்கு அனைத்து போக்குவரத்து செலவுகள், தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகளை சவுதி அரசு முழுமையாக வழங்கி வருகிறது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் பணியின் ஊடாகப் பிரிக்கப்பட்ட சில இரட்டையர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் புனித ஹஜ் கடமையை இலவசமாக நிறைவேற்றவும் சவுதி வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் 2024 இல் 22 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மன்னர் சல்மானின் மனிதாபிமானத்திற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இத்திட்டத்தின் கீழ் இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்த இரட்டையர்களும் அவர்களது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்துக்கும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் சவுதி மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இரு கரமேந்தி பிரார்த்தனை செய்தனர். அவர்களது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மனிதாபிமான வேலைத்திட்டங்களை சிறப்பாகச் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். மனிதகுலம் அனைவருக்கும் செழிப்பானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்கவென சவுதியும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையமும் பாரிய பங்களிப்புகளை நல்கி வருகிறது.
மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக விளங்கும் சவுதி, உலகில் மனிதாபிமானத்தை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்கு சவுதி அரேபிய அரசும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையமும் செய்துள்ள அளப்பரிய சேவைகள் பொன்னெழுத்திக்களால் பதியப்பட வேண்டியவையாகும்.
இலங்கையில் சல்மான் நிவாரண பணிகள்
அந்த வகையில் இலங்கையில் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் மூலம் பல்வேறு மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக 2024 நவம்பரில் மாத்திரம் 4,500 க்கும் மேற்பட்ட கண் பார்வை தொடர்பான நோயாளர்களை அடையாளம் கண்டு 600 க்கும் மேற்பட்ட மருத்துவ கண்ணாடிகளை இலவசமாக வழங்கியது. 500 க்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஊடாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாத மக்களும் பயனடைந்துள்ளனர். இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி இத்திட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுத்ததோடு மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி மையத்தின் விஷேட பிரதிநிதிகளும் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இன, மத வேறுபாடின்றி உலக நாடுகளில் மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்துவரும் சவுதி, இறைவனுக்காகவும், மனித இனத்திற்காகவும், யாரிடமும் எந்த வெகுமதியையும், நன்றியையும் எதிர்பார்க்காமல் அதன் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
உலக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதன்மை நாடாக விளங்கும் சவுதி, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதும் நாடுகள் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலைக்கு செல்லும் போதும் இக்கட்டான சந்தர்ப்பங்களின் போதும் மனிதாபிமான உதவிகள் வழங்குதில் பின் நின்றதில்லை. அந்த வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்யவும் இயற்கை அனர்த்தங்களின் போதும் குறிப்பாக சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இப்படிப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளும் சவுதி அரசின் மூலமாகவும் அந்நாட்டின் தனவந்தர்கள் மூலமாகவும் காலாகாலமாக முன்னெடுக்கப்படுகிறது.
என்றாலும் 2015 முதல் அனைத்து மனிதாபிமான உதவிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்” எனும் பெயரில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முழு உலக மக்களுக்குமான மனிதாபிமான உதவிகள் ‘எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் சவுதி செய்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்ட நோய்களை குணப்படுத்தல், குடிநீர்வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீடுகளை நிர்மாணித்தல் பாதுகாப்பு லொஜோஸ்டிக் சேவைகள், கல்வி, உலர் உணவு விநியோகம், இயற்கை அனர்த்தங்களின் போது உதவுதல், ரமழானில் பேரீச்சம் பழங்கள் விநியோகம் போன்ற இன்னோரன்ன மனிதாபிமான நிகழ்ச்சிகளை இம்மையம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. இம்மையம் முன்னெடுக்கும் மனிதாபிமானப் பணிகளை இன, மதபேதமின்றி உலக மக்கள் மாத்திரமல்லாமல் இலங்கை மக்களும் பாராட்டவே செய்கின்றனர்.
அந்த வகையில் இந்நிவாரண மையமானது 2015 முதல் இற்றை வரையும் 1,979,808,924 அமெரிக்க டொலர்களை இலங்கை உட்பட உலகில் பல நாடுகளுக்கும் மனிதாபிமானப் பணிகளுக்காக செலவிட்டுள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் நலன்கள் விடயத்தில் அதி முக்கிய கவனத்தை சவுதி செலுத்தி வருகிறது. அவர்களையும் உலகில் சிறந்த பிரஜைகளாகவும் அனைவரும் மதிக்கின்ற மக்களாகவும் வாழ வைக்க சவுதி எடுத்திருக்கும் இம்முயற்சி பெரிதும் பாராட்டப்படுகிறது.
எனவே ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் விடயத்தில் இவ்வளவு பெரிய கரிசனை காட்டி சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி அவர்களையும் வாழ வைக்கவென சவுதி முன்னெடுக்கின்ற இம்மாபெரும் அர்ப்பணிப்புகளுக்காக இலங்கை மக்கள் சார்பாக இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆல் ஸஊத் மற்றும் மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ரபீஆ ஆகியோருக்கும் சவுதி அரேபிய மக்களுக்கும் இலங்கை சார்பாக அல் ஹிக்மா நிறுவனம் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. அத்தோடு இம்மாநாடு வெற்றி பெற நாம் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
மௌலவி எம்.எச்.சேஹூத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு