உள்நாடு

பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வு 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அமர்வுநாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.

அதன் பின்னர் அரசியலமைப்பின் 64(1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகர் தெரிவு, சபாநாயகரின் பதவிச்சத்தியம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை அதன் பின்னர் பிரதி சாபாநாயகரும் குழுக்களின் தலைவரும், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரின் தெரிவுசெய்வது இடம்பெறும்.

அதனை அடுத்து பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மு.ப 11.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்படும்

அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *