உள்நாடு

வாக்காளர்களுக்கு வழிகாட்டத் தவறியதால் பறிபோனது களுத்துறை பிரதிநிதித்துவம்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி கூட வெற்றி பெறாமல் இருப்பதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு சரியான வழிகாட்டல்களை வழங்கும் அமுக்கக் குழு ஒன்று இல்லாமையே காரணம் என மாவட்டத்தின் புத்திஜீவிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது.


சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான அஷ்ஷெய்க். யாஸிர் லாபிர் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். நடுநிலையாக பக்க சார்பில்லாமல் செயல்படுகின்ற ஒரு அமுக்கக் குழு சமூகத்தில் செயற்பட்டிருந்தால் மூன்றாவது முறையும் முஸ்லிம் சமூகம் களுத்துறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அஷ்ஷெய்க். யாஸிர் தெரிவித்தார். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் பெறுமதியை உணரத் தவறியதனால் எமது மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை இழந்தோம். மாவட்டத்தின் உலமாக்கள் புத்திஜீவிகள் படித்தவர்கள் அரசியல் பிரமுகர்கள் பல நூறு பேர் இருந்தும் வாக்காளர்களுக்கு வழிகாட்ட தவறிட்டார்கள் என்றும் அரசியல்வாதிகளுக்கு நமது விருப்பப்படி செயல்பட இடம் அளித்தார்கள் என்றும் அஷ்ஷெய்க். யாஸிர் லாபிர் தெரிவித்தார்.


நடந்து முடிந்த தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இப்திகார் ஜெமீல் 41,022 வாக்குகளை பெற்றதோடு, தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எம் ஏ அரீஸ் 41,071 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம் எஸ் ஏ அஸ்லம் 14,379 வாக்குகளையும் பெற்றார். இத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகாததற்கு மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமையே காரணம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம் எம் எம் அம்ஜத் தெரிவித்தார்.


களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொடராக மூன்று முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *