சூடு பிடிக்கும் தேசிய பட்டியல் விவகாரம்; ரவி வீட்டுக்கு கடும் பாதுகாப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது. அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் நேற்று ஆட்சேபனைகளை வெளியிட்ட நிலையில், ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அச்சம் நிலவுவதால் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.