பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரை வெள்ளையடித்துக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ரி20 போட்டியில் மார்க்ஸ் ஸ்டொய்னிஸின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 52 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி20 ஆகிய தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதில் முதலில் நிறைவுக்கு வந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:1 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் ஆரம்பித்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி 2:0 என தொடரை தன் வசப்படுத்தியிருந்தது. அதற்கமைய தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று ஹார்போட்டில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம் செய்தது. அதன்படி களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு முன்வரிசை வீரர்களான பாபர் அஸாம் 41 ஓட்டங்களையும் , ஹசீபுல்லாஹ் கான் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சாளரான ஷஹீன் அப்ரீடி 16 ஓட்டங்களையும் பெற மற்றைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் நடையைக் கட்ட அவ்வணியால் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 117 ஓட்டங்களையே பெற முடிந்தது. பந்துவீச்சில் ஆரன் ஹார்டி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
தொடர்ந்து 118 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த அவுஸ்திரேலிய அணிக்கு 4ஆம் இலக்கத்தில் வந்த ஸ்டொய்னிஸ் ஆறு நான்கு என பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்து ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், ஜோஸ் இங்லிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க வெறும் 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று 52 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது. பந்துவீச்சில் அறிமுக வீரரான ஜஹான்டட் கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)