தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனஞ்சய டி சில்வா தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கிங்ஸ்மீட் டர்பனிலும், 2ஆவதும் இறுதியுமான போட்டி டிசம்பர் 5ஆம் திகதி செயின்ட் ஜார்ஜஸ் பார்க்கிலும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இத் தொடருக்கான பயிற்சிகளுக்கு இலங்கையின் 10 வீரர்கள் தென்னாபிரிக்கா பயணித்துள்ளர். இந்நிலையில் ஏனைய வீரர்கள் 22ஆம் திகதி தென்னாபிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளனர்.
அதற்கமைய இத் தொடருக்கான 17 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இத் தொடருக்கும் இலங்கை அணியினை சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வா வழிநடாத்துகின்றார். மேலும் துடுப்பாட்ட வீரர்களாக பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, ஒஷத பெர்ணான்டோ, நிஷான் பீரிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரர்களாக தினேஷ் சந்திமால், குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் சகலதுறை வீரர்களாக கமிந்து மெண்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சில்,சுழலில் அசத்த பிரபாத் ஜெயசூரிய, லசித் எம்புல்தெனிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சினை பொறுத்தவரையில், மிலான் ரத்னாயக்க, அஷித பெர்ணான்டோ, விஷ்வ பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார உடன் கசுன் ராஜித்த ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை அணி தொடராக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில் தென்னாபரிக்காவினை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தும் எனும் எதிர்பார்ப்புடன் இலங்கை ரசிகர்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)