சவுதி அரேபிய மன்னர் சல்மானின் ஏற்பாட்டில் ஆயிரம் உலக முஸ்லிம்களுக்கு இலவச உம்ரா
உலகெங்கிலும் இருந்து தெரிவு செய்யப்படும் ஆயிரம் முஸ்லிம்கள் இவ்வருடமும் இலவசமாக உம்ரா கிரியை நிறைவேற்றுவதற்கு வசதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் நேற்று முன்தினம் (17 ஆம் திகதி) அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவர்கள் மன்னரின் சொந்த செலவில் புனித மக்காவுக்கு வந்து உம்ராக் கடமைகளை மேற்கொள்ள வசதி அளிக்கப்படுவதோடு மதீனா மற்றும் புனிதஸ்தலங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவும் சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மன்னர் சல்மானின் உலக முஸ்லிம்களுக்கான இம்மாபெரும் நன்கொடை அனைத்து முஸ்லிம்களதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மன்னர் சல்மான் வருடா வருடம் ஏழைகள், உலமாக்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள் என ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இலவச ஹஜ், உம்ராக்களை வழங்கி அவர்களை கௌரவிப்பது அவரது சிறப்பம்சமாகும்.
சவுதி அரேபியாவைப் பொருத்தவரையில் அன்று தொட்டு இன்று வரைக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களால் இலவசமாக ஹஜ் உம்ராக்களை வழங்குவது அவர்களது வழமை. இதே தொடரிலே இரு பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் உலகின் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இலவச ஹஜ், உம்ராக்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கி அவர்களை மன்னரது விஷேட விருந்தினர்களாக புனித மக்காவுக்கு அழைத்து வந்து அக்கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது பணிகளுக்கு இளவரசர் முஹம்மத் பின் சல்மான், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் அஷ்ஷைக் அப்துல் லதீப் ஆல் ஷைக் மற்றும் அமைச்சின் சகல ஊழியர்களும் மன்னருக்கு பக்க துணையாக இருந்து செயற்படுகின்றனர்.
மன்னரின் இப்பாரிய நன்கொடை முழு உலக மக்களாலும் பாராட்டப்படுகின்ற விடயமாக இருக்கிறது. வருடா வருடம் உலக முஸ்லிம்களுக்கு இப்பாரிய நன்கொடைகளை மன்னர் சல்மான் வழங்கினாலும் விஷேடமாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு என அன்று தொட்டு இன்று வரையும் ஆயிரம் ஹஜ்களையும் உம்ராக்களையும் வழங்கி வருகிறார். இது அவருடைய மிகப்பெரும் தாராளத் தன்மையாகும்.
மேலும், உலகில் உள்ள எல்லா நாடுகளில் இருந்தும் மக்களை இலவச ஹஜ் உம்ராவுக்காக அவர்கள் வரவழைக்கிறார்கள். சவுதி அரேபியாவின் அரச பரம்பரை இவ்வாறான நல்ல காரியங்களை உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கிறது.
உலகிலுள்ள எந்தவொரு முஸ்லிமும் புனித மக்காவை நோக்கி வாழ்வில் ஒரு தடவையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருக்கின்றனர். எல்லோருடைய மனதிலும் புனித மக்காவை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய பொருளாதார வசதிகள் இன்மையால் இது ஒரு எட்டாக்கனியாக இருக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியான மக்களுக்கு மன்னர் அவர்களது இந்த நன்கொடை அவர்களது கனவுகளை நனவாக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இருக்கிறது.
இலங்கை நாணயப்படி இவ்வாறான அதிமுக்கிய பிரதிநிதிகளுக்கான உம்ராவுக்கான ஒரு நபரின் மொத்த செலவு சுமார் பத்து இலட்சம் ரூபாவையும் தாண்டும். அப்படியென்றால் உலகின் நாலா புறங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படுகின்ற 1000 உம்ரா யாத்திரிகர்களுக்கும் எத்தனை பில்லியன் ரியால்களை சவுதி செலவு செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கும் மன்னரின் இலவச ஹஜ், உம்ராக்கள் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் இலங்கை முஸ்லிம்கள் சவுதி அரசுக்கு தங்களுடைய நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதேவேளை இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, கண்பார்வையற்ற ஹாபிழ் முக்பில் சினான் என்ற மாணவரை தூதரகத்திற்கு வரழைத்து அவரை கெளரவப்படுத்தியதோடு அவர் உட்பட அவரது குடும்பத்தில் மூவருக்கு இலவச உம்ரா வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார். இது தான் சவுதி அரேபிய மன்னர்கள், இளவரசர்கள், தூதுவர்கள், அந்நாட்டு மக்களின் மிகச் சிறந்த நற்பண்புகளாகும்.
எனவே இப்படியான இலவச உம்ரா, ஹஜ்களை வழங்கிக் கொண்டிருக்கும் மன்னர் சல்மானுக்கும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் இப்பாரிய பொறுப்பை நேரடி கண்காணிப்பிலும் களத்திலும் நின்று சிறந்த முறையில் யாத்திரிகர்களுக்காக சேவையாற்றும் இஸ்லாமிய கலாசார அமைச்சர் அஷ்ஷைக் அப்துல் லதீப் ஆல் ஷைக்கும் அவரது அமைச்சு ஊழியர்களுக்கும் உலக நாடுகளில் சேவை புரியும் சவுதி அரேபிய தூதுவர்களுக்கும் சவுதி அரசுக்கும் அல் ஹிக்மா நிறுவனம் சார்பாகவும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் உலக முஸ்லிம்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மன்னரதும் இளவரசரதும் இஸ்லாமிய கலாசார அமைச்சரதும் சவுதி மக்களதும் நல்ல பணிகளை இறைவன் அங்கீகரித்து அவர்களுக்கு அருள்புரிய இச்சமயம் பிரார்த்திக்கிறேன்.
அஷ்ஷைக் எம் எச் ஷைஹுத்தீன் மதனி
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு