முக்கிய 4 வீரர்களுக்கு ஓய்வை வழங்கியுள்ள இலங்கை அணி; நாளைய போட்டியில் சிறாஸ் இடம்பெறலாம்
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நாளை (19) இடம்பெறவுள்ள 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலிருந்து முன்னனி வீரர்கள் நாள்வருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு இலங்கை அணி வாய்ப்பு வழங்கியுள்ளது.
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகள் முடிவுக்கு வந்திருக்க இவ்விரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2:0 என கைப்பற்றியிருந்தது. மேலும் 12 வருடங்களுக்கு பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய நாளை (19) கண்டி பல்லேகல மைதானத்தில் பகளிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ள 3ஆவதும் , இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கையின் முன்னனி வீரர்களான பெத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித பெர்னான்டோ ஆகிய நால்வருக்கு ஓய்வு வழங்கியுள்ளது இலங்கை கிரிக்கெட் சபை. மேலும் இந்த ஓய்வானது அடுத்த இலங்கை எதிர்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டேயாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு பதிலான இளம் வீரர்களான நுவனிந்து பெர்னான்டோ, லஹிரு உதார மற்றும் வேகப்பந்து வீச்சாளரான எஷான் மாலிங்க ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும், இன்றைய போட்டியில் முஹம்மது சிறாஸ் இலங்கை பதினொருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
(அரபாத் பஹர்தீன்)