களுத்துறையில் அமைதியான வாக்களிப்பு..!
களுத்துறை மாவட்டத்தின் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு 14 ஆம் திகதி மிகவும் அமைதியாக இடம்பெற்றது.
காலை 7:00 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு ஆரம்பமானது. காலை முதல் நண்பகல் வரை வாக்காளர்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது.
பேருவளை தொகுதியிலுள்ள தர்கா நகர், சீனன்கோட்டை, மருதானை, மாளிகாகேனை, மஹகொட, மொல்லியமலை, அம்பேபிடிய, பெருகமலை, மக்கொனை இந்திரிலியகொடை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பு மிகச் சுறுசுறுப்பாக இருந்ததை நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
வாக்குச்சாவடிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, விஷேட ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளருமான அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அரூஸ் அஸாத் ஆகியோர் பேருவளை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலும், களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் அல்-ஹாஜ் இப்திகார் ஜமீல் சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலும், ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஹெட்டிமுல்ல வாக்களிப்பு நிலையத்திலும், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் எம்.எஸ்.எம் அஸ்லம் ஹாஜியார் தர்கா நகர் வாக்களிப்பு நிலையத்திலும், பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான, அஸ்மத் ஸைராக் தர்கா நகரிலும், பிரஸன்ன ஸன்ஜீவ பாதகாகொட வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களித்தனர்.
அத்தோடு, ஸிலின்டர் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி.சில்வா களுவாமோதர வாக்களிப்பு நிலையத்திலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் சீனன்கோட்டையிலும் வாக்களித்தனர்.
காலை 7 மணிக்கே சில வாக்குச்சாவடிகளில் நீண்ட கியூ வரிசை காணப்பட்டது.
(பேருவளை பீ.எம் முக்தார்)