நியூசிலாந்தில் “Possum” விலங்குகளை கட்டுபடுத்தும் புதிய பொறிமுறையை கண்டுபிடித்த காத்தான்குடி இளைஞர் ஸபீர்
நியூசிலாந்தில் பாரிய பிரச்சினையாக காணப்படும் “possum” என்கின்ற அவுஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு பூனையை விட பெரிதான தோற்றம் கொண்டதுடன் நியூசிலாந்தின் உள்நாட்டு தாவரங்கள், ஏனைய விலங்குகள், பறவை இனங்களை அழித்துவருவதுடன் சுற்று சூழலை பதிப்பதோடு பசு , மான் போன்ற விலங்குகளுக்கு காச நோயை பரப்புவதற்கும் காரணமாக அமைக்கிறது . இதனால் நியூசிலாந்தின் தேசிய வருமானத்திற்கு பெருமளவு பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இவ் “Possum” விலங்கு இனத்தை கட்டுப்படுத்துவதற்கான புதிய பொறிமுறை பல வருடங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல வகையான பொறிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் “possum” களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எதிர்பார்த்த முடிவுகளை தராத போது இலங்கை காத்தான்குடியை சேர்ந்த நியூசிலாந்து Lincoln பல்கலைக்கழக விஞ்ஞான முதுமானி முஹம்மட் ஸபீர் இனது புதிய ஆராய்ச்சியும் கண்டுபிடிப்பும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ் ஆராய்ச்சி நியூசிலாந்தின் “பேங்ஸ் ” தீபகற்பத்தில் (Banks Peninsula) மேற்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சியில் பொறிகளில் உணவு பொருட்களை பாவிப்பதற்க்கு பதிலாக ” Possum ” விலங்கின் சத்தம் , LED ஒளி மற்றும் possum விலங்கின் உடல் வாசம் போன்றவற்றை புதிய தொழில் நுட்பத்தோடு பொறிகளில் உள்ளடக்கி அவ் விலங்குகளை எவ்வாறு கவரப்படுகிறது என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாராய்ச்சி முடிவில் உணவுக்கு பதிலாக இவ்வாறான தொழில் நுட்பத்தின் மூலம் அதிகமான “Possum” விலங்குகளை அழித்தொழிக்க முடியும் என்பதை இளைஞர் முஹம்மட் ஸபீர் விஞ்ஞான ரீதியாக நிருபித்திருந்தார்.
Lincoln பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் றூஸ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது “வன முகாமையாளர்கள் காலத்துக்கு காலம் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவதன் மூலமே இந்த “Possum” விலங்குகளை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைய முடியும்” என தெரிவித்தார்.
நியூசிலாந்து வன முகாமைத்துவ அதிகாரி டிம் கூறுகையில் ” இந்த கண்டுபிடிப்பு தொலைவிலுள்ள Possum விலங்குகளை கவர்வதற்க்கு உதவுவதன் மூலம் செலவினங்களை பெருமளவில் குறைப்பதோடு வினைத்திறனான முகாமைத்துவத்திற்க்கும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இக் கண்டுபிடிப்பு நியூசிலாந்தின் வன முகாமைத்துவ அமைப்பின் உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் முஹம்மட் ஸபீர் இன் ஆராய்ச்சி மீதான ஆர்வம் மற்றும் Lincoln பல்கலைக்கழகத்தின் ஆதரவுடனும் “Predator Free 2050 Ltd” திணைக்களத்தின் நிதியுதவியுடன் மேற்கொளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.பஹத் ஜுனைட்)